அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மீது கடும் குற்றச்சாட்டு: அமைச்சர்கள் சமாதானப்படுத்தியதால் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மீது கடும் குற்றச்சாட்டு: அமைச்சர்கள் சமாதானப்படுத்தியதால் பரபரப்பு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் மீது  எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கடும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். அவர்களை அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

இந்தக் கூட்டணியை மெகா கூட்டணி என்றும் வெற்றிக் கூட்டணி என்றும் அழைத்தனர். ஆனால் மக்கள் இந்தக் கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்து விட்டனர்.

மக்களவை தேர்தலில் தமிழகம், புதுவையில் நடந்த தேர்தலில் 38 தொகுதிகளில் தோல்வியடைந்தது. தேனி தொகுதியில் மட்டும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் மட்டும் வெற்றி பெற்றார்.

இதனால் கூட்டணிக்குள் கடும் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சர் சி. வி. சண்முகம், முன்னாள் அமைச்சர் சி. த. செல்லப்பாண்டியன், தூசி மோகன் எம்எல்ஏ ஆகியோர் பாஜவுடன் அதிமுக சேர்ந்ததால்தான் தோல்வி அடைய நேரிட்டது என்று நேரடியாகவே குற்றம்சாட்டினர்.

பாஜவின் செயற்குழு கூட்டத்தில் அதிமுகவினர்தான் தோல்விக்கு காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தனர்.

இதற்கிடையில், மத்திய அமைச்சரவையில் ஓபிஎஸ் மகனுக்கு இடம் வழங்க மோடி முடிவு செய்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை தூண்டி விட்டு, தமிழகத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்.

இதனால் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் எடப்பாடி ஆதரவாளர்களான ராஜன் செல்லப்பா, குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் ஒற்றை தலைமை வேண்டும் என்று பேட்டி அளித்தனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. தலைவர்கள் இருவருமே தங்களுக்காகத்தான் செயல்படுகின்றனர்.

மக்களுக்காக செயல்படவில்லை. தொண்டர்களுக்காக செயல்படவில்லை என்று எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த சூழ்நிலையில் எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருப்பதால், அவர்களை சரிக்கட்ட ஓபிஎஸ், இபிஎஸ் முடிவு செய்தனர். இதற்காக நிர்வாகிகளின் அவசர கூட்டத்தை கூட்டுவது என்று முடிவு செய்தனர்.

இதற்காக இன்று காலையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளின் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் காலை 10 மணிக்கு வந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 10. 20 மணிக்கு வந்தார்.

இருவரையும் கட்சியின் தொண்டர்கள் வரவேற்றனர். அதில் எடப்பாடி வந்தபோது, கட்சியின் பொதுச் செயலாளரே என்று கோஷமிட்டனர்.

இதை கேட்டு, சிரித்தபடி கட்சியின் அலுவலகத்துக்குள் சென்றார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்டச் செயலாளர்கள் என 210 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களான பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய 3 பேருக்கு அழைப்பு அனுப்பவில்லை. இதனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

மேலும் அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் கருணாஸ், தமிமுன்அன்சாரி, தனியரசு ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பவில்லை. மற்ற 210 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

அதில் உடல்நிலை சரியில்லாததால் குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் மற்றும் அமைச்சர்கள் சி. வி. சண்முகம், ஓ. எஸ். மணியன் ஆகியோர் வரவில்லை.

113 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். தற்போது போர்க்குரல் எழுப்பி வரும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மற்றும், ராஜன் செல்லப்பா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் செல்போன், கேமரா கொண்டு செல்ல அனுமதி இல்லை. செல்போனை ஊழியர்கள் வாங்கி வைத்துக் கொண்டனர்.

கூட்டம் 10. 30 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் சில எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் நேரடியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர்.

உங்களுடைய குடும்பம், உறவினர்களை மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள். கட்சிக்காரர்களை கண்டு கொள்வதில்லை.

மாவட்டச் செயலாளர்களை மதிப்பதில்லை. எம்எல்ஏக்களை மதிப்பதில்லை.

இந்த தோல்விக்கு கூட்டணிக் கட்சியினரை மட்டுமே காரணமாக கூறக் கூடாது. தலைவர்கள்தான் காரணம்.அவர்கள் சுயநலமாக நடந்து கொண்டனர் என்று சரமாரியாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

அவர்களை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். உங்கள் குறைகளை எழுதிக் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறியதாக கூறப்படுகிறது.

ஆனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் எழுதிக் கொடுக்கிறோம். இதுவரை நடவடிக்கை என்ன எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனால் கேள்வி எழுப்பியவர்களை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். மேலும் விரைவில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அப்போது திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதில் அனைத்து எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று எட்பாடியும், ஓபிஎஸ்சும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. கூட்டம் மதியம் வரை தொடர்ந்து நடந்தது.


.

மூலக்கதை