வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு சிறை தண்டனை வழங்கும் சட்ட மசோதா: பீகார் அமைச்சரவை ஒப்புதல்

தினகரன்  தினகரன்
வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு சிறை தண்டனை வழங்கும் சட்ட மசோதா: பீகார் அமைச்சரவை ஒப்புதல்

பாட்னா: வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு சிறை தண்டனை வழங்கும் சட்ட மசோதாவுக்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியால் குடும்ப வாழ்க்கை முறையானது தற்போது மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது. திருமணம் ஆனவுடன் பெற்றோரை விட்டு பிரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் மனப்போக்கு மக்களிடையே அதிகரித்துள்ளது. சிலர் தங்களின் பெற்றோர்களுக்கு அடிப்படை தேவைகளை கூட செய்யாமல், அனாதைகளாக தவிக்க விடுகின்றனர். வயதான பெற்றோரை பராமரிக்காமல் பிள்ளைகளே கைவிடுவதால், நாடு முழுவதும் முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றது. இவ்வாறு வயதான பெற்றோரை முறையாக கவனிக்காமல் கைவிடும் மகன்கள் மற்றும் மகள்களுக்கு, சிறை தண்டனை வழங்குவதற்கு பீகார் அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வரப்பெற்றால், பிள்ளைகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வயதான பெற்றோரை, பெற்ற பிள்ளைகளோ அல்லது பேரப்பிள்ளைகளோ கவனிக்காமல் கைவிட்டால், 3 மாதம் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனாலும் பெற்றோரை கவனிக்காமல் இருக்கும் பிள்ளைகளின் செயல் தொடர்வதால், சிறை தண்டனை விதிக்கும் காலத்தை 6 மாதமாக உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை