ஷிகர் தவான் விலகல் * இந்திய அணிக்கு பின்னடைவு | ஜூன் 11, 2019

தினமலர்  தினமலர்
ஷிகர் தவான் விலகல் * இந்திய அணிக்கு பின்னடைவு | ஜூன் 11, 2019

லண்டன்: உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான லீக் போட்டியில் காயம் காரணமாக இந்திய வீரர் ஷிகர் தவான் பங்கேற்க மாட்டார்.

இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் 33. உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள இவர், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் 8 ரன் எடுத்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பேட்டிங் செய்த போது 9வது ஓவரை வீசினார் கம்மின்ஸ்.

இந்த ஓவரின் 5வது பந்து மணிக்கு 139 கி.மீ., வேகத்தில் பவுன்சராக வந்தது. இது தவானின் இடது கை பெருவிரலில் தாக்கியது. முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்ட இவர், வலியுடன் தொடர்ந்து விளையாடி 117 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு  கைகொடுத்தார்.

அடுத்து பீல்டிங் செய்ய வரவில்லை. இவருக்குப் பதில் ஜடேஜா களமிறங்கினார். தவானுக்கு ‘ஸ்கேன்’ செய்து பார்த்த போது, லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதற்காக குறைந்தது 11 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் ‘அட்வைஸ்’ செய்தனர்.

இழப்பு எப்படி

இதனால் நாளை நியூசிலாந்து, 16ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் தவான் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என ஐ.சி.சி., தொடர்களில் 6 சதம் உட்பட 1,238 ரன்கள் எடுத்துள்ளார். உலக கோப்பை தொடரில் மட்டும் 10 போட்டிகளில் 537 ரன்கள் எடுத்த இவரது காயம், இந்திய அணிக்கு பின்னடைவு தான்.


கண்காணிப்பில்...

தவான் குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு வெளியிட்ட செய்தியில், ‘துவக்க வீரர் தவான் தற்போது பி.சி.சி.ஐ., மருத்துவ குழு கண்காணிப்பில் உள்ளார். இவர் தொடர்ந்து இங்கிலாந்தில் இருப்பது குறித்து அணி நிர்வாகம் முடிவு செய்யும்,’ என தெரிவித்துள்ளது. 

 

4,681

இந்தியாவின் தவான், ரோகித் இணைந்து முதல் விக்கெட்டுக்கு ஜோடியாக 103 இன்னிங்சில் 4,681 ரன்கள் எடுத்தனர். ஒருநாள் அரங்கில் துவக்க ஜோடி எடுத்த நான்காவது அதிகபட்ச ரன் குவிப்பு இது. முதல் மூன்று இடத்தில் சச்சின்–கங்குலி (6,609, இந்தியா), கில்கிறிஸ்ட், ஹைடன் (5,372, ஆஸி.,), கிரீனிட்ஜ், ஹெய்ன்ஸ் (5,150, விண்டீஸ்) ஜோடி உள்ளது.

 

மீள்வது எப்போது

தவான் காயம் சரியானால் வரும் 22ம் தேதி ஆப்கானிஸ்தான் அல்லது 27ம் தேதி விண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடலாம். ஒருவேளை தாமதம் ஆனால் வங்கதேசம் (ஜூலை 2), இலங்கை (ஜூலை 6) அணிக்கு எதிராக களமிறங்குவார். இது ‘நாக் அவுட்’ போட்டிகளில் பங்கேற்க நம்பிக்கை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மூலக்கதை