பாக்., ‘வில்லங்க’ விளம்பரம்! *விளாசும் இந்திய ரசிகர்கள் | ஜூன் 11, 2019

தினமலர்  தினமலர்
பாக்., ‘வில்லங்க’ விளம்பரம்! *விளாசும் இந்திய ரசிகர்கள் | ஜூன் 11, 2019

  புதுடில்லி: கிரிக்கெட் அரங்கில் இந்தியா, பாகிஸ்தான் மோதலுக்கு அதிக வரவேற்பு உண்டு. கடந்த 2015 உலக கோப்பை தொடரில் இரு அணிகள் மோதலுக்கு முன் வெளியான ‘மோக்கா... மோக்கா’ விளம்பரம் மிக பிரபலம். வரும் 16ம் தேதி தந்தையர் தினத்தில் இரு அணிகளும் மீண்டும் மோதவுள்ளன. உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான 6 போட்டிகளிலும்  வென்றுள்ளது.

இந்த முறை நடக்கும் போட்டிக்காக பாகிஸ்தானின் ஜாஸ் ‘டிவி’ வெளியிட்ட விளம்பரம் இந்திய ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதில்,‘ சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போல வேடம் அணிந்த ஒருவரிடம் கேள்விகள் கேட்கின்றனர். எங்களுக்கு எதிராக ‘டாஸ்’ வென்றால் என்ன செய்வீர்கள், களமிறங்கும் 11 பேர் கொண்ட வீரர்கள் பெயர்கள் என்ன? என கேட்கின்றனர். இதற்கு அந்த நபர்,‘ சாரி ஜென்டில்மேன், இதை உங்களிடம் சொல்ல முடியாது,’ என அபிநந்தன் போல தெரிவித்தார்.

பின் கிளம்பும் போது, டீ கப்பை பறித்துக் கொள்கின்றனர். அப்போது ‘உலக கோப்பையை நாட்டுக்கு கொண்டு வாருங்கள்,’ என்ற வாசகத்துடன் முடிகிறது. இந்த விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தந்தையர் தினம்

ஸ்டார் நிறுவனம் சார்பில் வெளியான மற்றொரு விளம்பரம் தந்தையர் தினத்தை நினைவு படுத்தும் வகையில் உள்ளது. இதில்,‘பாகிஸ்தான் ரசிகரிடம் சென்ற வங்கதேச ரசிகர், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெல்ல வாழ்த்து தெரிவிக்கிறார். இதற்கு அந்த பாகிஸ்தான் ரசிகர்,‘முயற்சி செய்து கிட்டே இருந்தால், என்றாவது ஒருநாள் வெற்றி பெறலாம்,’ இது எனது அப்பா சொன்னது,’ என்கிறார். அருகில் இருந்த இந்திய ரசிகர்,‘நான் அப்படி சொல்லவே இல்லையே’ என்கிறார்.

அதாவது உங்கள் இருவருக்கும் நான் தான் அப்பா என்பது போல செல்கிறது இந்த விளம்பரம். இந்த இரு விளம்பரங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மூலக்கதை