கொட்டும் மழை காலம்: இந்தியா, நியூசி., போட்டிக்கு சிக்கல் | ஜூன் 11, 2019

தினமலர்  தினமலர்
கொட்டும் மழை காலம்: இந்தியா, நியூசி., போட்டிக்கு சிக்கல் | ஜூன் 11, 2019

 நாட்டிங்காம்: இங்கிலாந்து மண்ணில் மேகங்கள் சூழ்வதும் அடிக்கடி மழை பெய்வதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் லீக் சுற்றில் பல போட்டிகள் ரத்தாகின. இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியும் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் ‘ரவுண்டு ராபின்’ முறையில் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இதனிடையே இங்கிலாந்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அடுத்தடுத்து போட்டிகள் பாதிக்கப்படுகின்றன. பாகிஸ்தான்–இலங்கை மோத இருந்த போட்டி மழை காரணமாக ‘டாஸ்’ கூட போடாமல் கைவிடப்பட்டது.

தென் ஆப்ரிக்கா, விண்டீஸ் அணிகள் இடையிலான போட்டி 7.3 ஓவர்கள் மட்டும் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது. இப்போட்டிகளில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து தரப்பட்டன. நேற்று இலங்கை, வங்கதேசம் இடையிலான போட்டியும் மழை காரணமாக ரத்தானது.

இதனிடையே நாளை நாட்டிங்காமில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கடந்த இரு நாட்களாக இங்கிலாந்து முழுவதும் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உள்ளூர் ‘நாட்டிங்காம்போஸ்ட்’ இணையதளத்தில் வெளியான செய்தி:

நாட்டிங்காமின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இங்கிலாந்தின் பர்மிங்காம், பீட்டர்ஸ்பர்க், நியூகேசில் பகுதிகளிலும் இது தொடரும். தொடர்ச்சியான பலத்த மழை காரணமாக வெள்ளம் வர வாய்ப்புள்ளது. பொதுமக்கள் போக்குவரத்திற்கு தொல்லை ஏற்படும். இன்று இரவு 7:00 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. பிறகு மழை குறையும். இது 13ம் தேதி மதியம் வரை இது நீடிக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி நடக்குமா

இதனிடையே இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் லீக் போட்டி நாளை நாட்டிங்காமில் நடக்கவுள்ளது. இங்கு மதியம் வரை மழை பெய்யலாம் என்பதால் போட்டி முழுமையாக நடப்பது சந்தேகம் தான். தலா 25 அல்லது 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடக்கலாம்.

மூலக்கதை