ரிஷாப் பன்ட், ஸ்ரேயாஸ் போட்டி * தவான் இடம் யாருக்கு | ஜூன் 11, 2019

தினமலர்  தினமலர்
ரிஷாப் பன்ட், ஸ்ரேயாஸ் போட்டி * தவான் இடம் யாருக்கு | ஜூன் 11, 2019

 நாட்டிங்காம்:  காயமடைந்த ஷிகர் தவானுக்குப் பதில் ரிஷாப் பன்ட் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறலாம் எனத் தெரிகிறது. 

இந்திய அணி துவக்க வீரர் ஷிகர் தவான், இடது கை பெருவிரல் காயம் காரணமாக உலக கோப்பை தொடரின் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. 

தற்போது இவருக்கு மாற்று வீரரை அறிவித்து விட்டால், வேறு யாராவது காயம் அடைந்தால் மட்டுமே தவான் மீண்டும் அணிக்கு திரும்ப ஐ.சி.சி., அனுமதி தரும். ‘நாக் அவுட்’ போட்டிகளில் தவான் பங்கேற்க முடியாமல் போகலாம் என்பதால் மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

‘ரிசர்வ்’ வீரர்களாக உள்ள அம்பதி ராயுடு, ரிஷாப் பன்ட் ஆகியோர் தவானுக்கு பதிலாக வாய்ப்பு பெறலாம். ஆனாலும் இந்திய அணி நிர்வாகம், ‘பேட்டிங் வரிசையில்’ நான்காவது இடத்தில் ‘ஸ்பெஷலிஸ்டாக’ கருதப்படும் ஸ்ரேயாஸ் ஐயரை சேர்க்க ஆர்வமாக உள்ளது. ஸ்ரேயாஸ் தற்போது இங்கிலாந்தில் தான் உள்ளார்.

தவான் இல்லாத நிலையில் ரோகித்துடன் இணைந்து லோகேஷ் ராகுல்  துவக்கம் தர வாய்ப்புள்ளது. ‘மிடில் ஆர்டரில்’ தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர், களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவர் என நம்பப்படுகிறது.

மாற்று வீரர் யார்

இதுகுறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,‘‘புதிய பந்தை எதிர் கொள்வதில் திறமையானவர் தவான், காயத்தால் அவதிப்படுவது இந்திய அணிக்கு சிக்கல் தான். இது சரியாக நீண்ட நாட்கள் தேவைப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர். 20 நாட்கள் ஆனாலும் சரி, அரையிறுதிக்கு முன்பாக, வங்கதேசம், இலங்கை அணிக்கு எதிராக தவானை களமிறக்க வேண்டும். தற்போதைக்கு ரோகித் சர்மாவுடன் லோகேஷ் ராகுல் அணிக்கு துவக்கம் தர வேண்டும். நான்காவது இடத்தில் களமிறங்க தினேஷ் கார்த்திக் தான் சரியான வீரர்.  மாற்று வீரர் எனில் ரிஷாப் பன்ட்டை தேர்வு செய்யலாம்,’’ என்றார்.

மூலக்கதை