அமெரிக்க பைக்குக்கு விதிக்கப்படும் 50 % இறக்குமதி வரியை ஏற்றுக் கொள்ள முடியாது : இந்தியாவுக்கு டிரம்ப் கண்டனம்

தினகரன்  தினகரன்
அமெரிக்க பைக்குக்கு விதிக்கப்படும் 50 % இறக்குமதி வரியை ஏற்றுக் கொள்ள முடியாது : இந்தியாவுக்கு டிரம்ப் கண்டனம்

வாஷிங்டன்: அமெரிக்காவின்  ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக் மீது இந்தியாவில் விதிக்கப்படும் 50 சதவீத  இறக்குமதி வரியை ஏற்றுக் கொள்ள முடியாது’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது  இந்தியாவில் அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுவதற்கு அதிபர் டிரம்ப் அவ்வப்போது கண்டனமும்,  எதிர்ப்பும் பதிவு செய்து வருகிறார். அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன்  பைக்குகளுக்கு இந்தியாவில் 100 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து,  கடந்த பிப்ரவரியில் இந்த வரியை 50 சதவீதமாக இந்தியா குறைத்தது. இதனால், டிரம்ப் கடந்த சில மாதங்களாக  அமைதியாக இருந்தார். கடந்த திங்கட்கிழமை இந்த பிரச்னையை அவர் மீண்டும் கிளப்பினார். இது பற்றி தொலைக்காட்சி  சேனலுக்கு அவர் அளித்துள்ள  பேட்டி: ஹார்லி  டேவிட்சன் பைக்குகள் உள்பட அமெரிக்க உற்பத்தி பொருட்களுக்கு இந்தியாவில்  விதிக்கப்படும் இறக்குமதி வரி ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் உள்ளது. இது  தொடர்பாக இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் கலந்து  பேசிய பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் முதல் வரியை 50  சதவீதமாக குறைப்பதாக உறுதியளித்தார். இந்த அறிவிப்பு திருப்தி அளித்தாலும்,  இது போதாது. இந்திய தயாரிப்புகளுக்கு அமெரிக்கா எந்த வரியும்  விதிப்பதில்லை. ஆனால், இந்தியா 50 சதவீதம் வரி விதிக்கிறது. இதனை ஏற்றுக்  கொள்ள முடியாது. அமெரிக்கா  ஒரு உலக வங்கியாக விளங்குகிறது. அதனால், இங்கிருப்பதை சுருட்டி கொண்டு  செல்ல எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். அதைத்தான் நீண்ட நாட்களாக பலர் செய்து  கொண்டிருக்கின்றனர். உலக நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை  800 பில்லியன் டாலராக உள்ளது. யார் இதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது  என்பதை யோசித்து பாருங்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

மூலக்கதை