வாட்ஸ் அப் அழைப்பில் நடந்த தவறை கண்டுபிடித்து கூறிய மணிப்பூர் வாலிபருக்கு பரிசு : பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
வாட்ஸ் அப் அழைப்பில் நடந்த தவறை கண்டுபிடித்து கூறிய மணிப்பூர் வாலிபருக்கு பரிசு : பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு

இம்பால்: வாட்ஸ் அப்பில் இருந்த பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடித்து தகவல் அளித்த மணிப்பூர் இன்ஜினியருக்கு ரூ.3.5 லட்சம் பரிசு வழங்கி பேஸ்புக் நிறுவனம் கவுரவித்துள்ளது. உலக அளவில் பிரபலமான வாட்ஸ் அப்பை பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிறுவனத்தை கடந்த 2014ல் விலைக்கு வாங்கிய பேஸ்புக் நிறுவனம், பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இவைகளில் உள்ள குறைபாடுகளை (பக்) கண்டுபிடித்து தகவல் தெரிப்பவர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசு வழங்கி வருகிறது.இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான சிவில் இன்ஜினியர் ஜோனல் சவுகய்ஜம், வாட்ஸ் அப்பில் உள்ள குறைபாட்டை கண்டுபிடித்துள்ளார். வாட்ஸ் அப்பில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் போது, கால் செய்தவர், எதிர் முனையில் இருப்பவருக்கு தெரியாமலேயே அந்த அழைப்பை வீடியோ அழைப்பாக மாற்ற முடிந்தது. இதனால், எதிர் முனையில் இருப்பவர் என்ன செய்கிறார் என்பதை அவருக்கு தெரியாமலேயே கால் செய்தவர் பார்க்க முடியும். இந்த குறைபாடு, தனி மனித உரிமையை பாதிப்பதாகும்.இது குறித்து ஜோனல், பேஸ்புக் நிறுவன பாதுகாப்பு குழுவின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். அடுத்த நாளே பேஸ்புக் தொழில்நுட்ப வல்லுநர்கள் அந்த குறைபாட்டை கண்டறிந்து, அடுத்த 15-20 நாளில் நிவர்த்தி செய்வதாக ஜோனலுக்கு தகவல் தெரிவித்தனர். அதோடு, இக்குறைபாட்டை கண்டுபிடித்து தகவல் தந்ததற்காக ₹3.5 லட்சம் பரிசுத் தொகை அளிப்பதாக பேஸ்புக் இமெயில் அனுப்பி இருப்பதாக ஜோனல் தெரிவித்துள்ளார். மேலும், அவரை கவுரவிக்கும் வகையில், ஜோனலின் பெயர் பேஸ்புக்கின் ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலிலும் இடம்  பெற்றுள்ளது.

மூலக்கதை