தடை செய்யப்பட்ட வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க பாக். அனுமதி: பதிலுக்கு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு

தினகரன்  தினகரன்
தடை செய்யப்பட்ட வான்வெளியில் பிரதமர் மோடியின் விமானம் பறக்க பாக். அனுமதி: பதிலுக்கு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு

லாகூர்: தடை செய்யப்பட்டுள்ள தங்களின் நாட்டு வான்வெளியில், பிரதமர் மோடியின் விமானம் பறக்க அனுமதி வழங்கிய பாகிஸ்தான், பதிலுக்கு அமைதி பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தூண்டில் போட்டுள்ளது. பாகிஸ்தானின் பாலகோட்டில் நுழைந்து தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் வான் எல்லைகள் மூடப்பட்டன. இந்தியாவில் இருந்து வரும்  விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியிலும், பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்கள் இந்திய வான்வெளியிலும் பறக்க தடை விதிக்கப்பட்டது. இத்தடையை இந்தியா கடந்த மாதம் 31ம் தேதி விலக்கிக் கொண்ட பிறகும், பாகிஸ்தான் வரும் 14ம் தேதி வரை நீட்டித்துள்ளது.இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுதினம் கிர்கிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) பங்கேற்க பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியை கடந்து செல்ல அனுமதிக்க வேண்டுமென மத்திய அரசு தரப்பில் பாகிஸ்தானிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கி உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தான் அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறந்து செல்ல இம்ரான்கான் தலைமையிலான அரசு அனுமதி வழங்கி உள்ளது. சில நடைமுறைகள் முடிந்ததும், பாகிஸ்தான் அரசின் முடிவு குறித்து இந்திய அரசிடம் அதிகாரப்பூர்வமான தெரிவிக்கப்படும். இது கொள்கை ரீதியான முடிவு. எந்த நிபந்தனையையும் நாங்கள் விதிக்கவில்லை. அதேசமயம், மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டுமென்ற பாகிஸ்தானின் கோரிக்கைக்கு இந்திய அரசு சாதகமான பதிலளிக்கும் என நம்புகிறோம்,’’ என்றார். முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் கடந்த மாதம் 21ம் தேதி, பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.இம்ரானுடன் சந்திப்பில்லைபுல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் விரும்புகிறது’ என கூறியிருந்தார். ஆனாலும், தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் இணைந்து பயணிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடியுடன், இம்ரான்கானும் கலந்து கொள்ள வருகிறார். ஆனாலும், இரு தலைவர்களும் அங்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதுமில்லை என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை