புதுவை முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடல்அரசு மரியாதையுடன்அடக்கம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிஅஞ்சலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதுவை முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடல்அரசு மரியாதையுடன்அடக்கம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிஅஞ்சலி

புதுச்சேரி: புதுச்சேரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஆர். வி. ஜானகிராமனின் உடல் அவரது சொந்த ஊரான மரக்காணத்தை அடுத்த ஆலத்தூரில் அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இதில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினார். புதுச்சேரி முன்னாள் முதல்வரான ஆர். வி. ஜானகிராமன் (79).

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகிலுள்ள ஆலத்தூரில் பிறந்தவர்.   இவர் 1996 முதல் 2000ம் ஆண்டு வரை திமுக - தமாகா கூட்டணி அரசில் புதுச்சேரி முதல்வராக பதவி வகித்தார். சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனிடம் டிரைவராக பணியாற்றிய இவர் சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை ஜானகிராமன் காலமானார்.

இதையடுத்து அவரது உடல் புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை 7 மணி வரை அவரது உடலுக்கு பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு அவரது சொந்த ஊரான மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூருக்கு உடல் எடுத்து செல்லப்பட்டு, பூர்வீக இடத்தில் அவரது தந்தை, தாய் உடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதி அருகில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக சொந்த ஊருக்கு வந்த அவரது உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டது.

பின்னர் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து புதுவை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்பி, தமிழக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எம்ஆர்கே பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள், ஆலத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் ஜானகிராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவர் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் போலீசார் குண்டுகள் முழங்க ஜானகிராமன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

.

மூலக்கதை