ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி உறுதி: காங். இடைக்கால தலைவர் ஏ.கே.அந்தோணி?: 17ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராஜினாமா முடிவில் ராகுல்காந்தி உறுதி: காங். இடைக்கால தலைவர் ஏ.கே.அந்தோணி?: 17ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் அறிவிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதால், கட்சியின் இடைக்கால தலைவராக ஏ. கே. அந்தோணியை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து அதுபற்றி ஆலோசனை நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கடந்த மாதம் 25ம் ேததி நடைபெற்றது.

அப்போது, ராகுல்காந்தி தலைவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே இடையில் வெளியேறிவிட்டார். ஒரு வாரமாக கட்சியில் எந்த பணிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.

மூத்த தலைவர்களை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். இடையில் ஜவகர்லால் நேரு நினைவு நாள் நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்றார்.பின்னர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டுக்கு சென்ற அவர், அவருடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது, காங்கிரஸ் கட்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், அதை  தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மறுத்தார்.
பின்னர் கர்நாடக முதல்வர் குமாரசாமி, ராகுல்காந்தியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

சில நாட்களுக்கு பின், தேர்தலில் தான் வென்ற வயநாடு தொகுதியில் 3 நாள் முகாமிட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதனால், அவர் கட்சி பணிகளை மீண்டும் தொடங்கி இருக்கிறார் என்றும், தனது ராஜினாமா பிடிவாதத்தை கைவிட்டு காங்கிரஸ் தலைவர் பதவியை தொடருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாக உள்ளது. அதன்படி, தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் கட்சியில் பல மாற்றங்களை கொண்டுவர ராகுல்காந்தி திட்டமிட்டு இருப்பதாகவும், மாநில அளவில் பல தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்றும் தெரிகிறது.இதற்கு வசதியாக பல மாநிலங்களின் தலைவர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருந்தும் காங்கிரஸ் தலைவர் பதவி ராஜினாமா முடிவில் இருந்து ராகுல்காந்தி இன்னும் பின்வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால், காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக மூத்த தலைவர் ஏ. கே. அந்தோணி நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 17ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால், காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய சில அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.

ஏற்கனவே நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை