தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி உள்பட 12 மாவட்டத்தில் நாளை அனல்காற்று வீசும்: குஜராத்தில் நாளை மறுநாள் கரை கடக்கிறது ‘வாயு’ புயல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி உள்பட 12 மாவட்டத்தில் நாளை அனல்காற்று வீசும்: குஜராத்தில் நாளை மறுநாள் கரை கடக்கிறது ‘வாயு’ புயல்

புதுடெல்லி: தென்கிழக்கு அரபிக் கடலில் ‘வாயு’ புயல் உருவாகி உள்ளதால், வருகிற 13, 14ம் தேதி குஜராத்தில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை, திருவள்ளூர், வேலூர்,  காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி,  பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் நாளை (ஜூன் 12) வரை அனல்  காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்று முன்தினம் தொடங்கியதையொட்டி, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.

தற்போது லட்சத்தீவு பகுதியின் தென்கிழக்கு அரபிக் கடல், கிழக்கு, மத்திய அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ‘வாயு’ புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் குஜராத் மாநிலம், போர்பந்தர் மற்றும் மஹூவா பகுதியில் நாளை மறுநாள் (ஜூன் 13) கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. அப்போது 135 கி. மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வடக்கு நோக்கி நகரும் வாயு புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். இதனால் வருகிற 13, 14ம் தேதி குஜராத்தில் கன மழை பெய்யும்.

புயல் கரையை கடக்கும் போது 110 கி. மீ முதல் 120 கி. மீ வரை காற்றின் வேகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் நாளை முதல் 14ம் தேதி வரை அரபிக் கடல் பகுதிக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வானிலை மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, குஜராத் அரசு தேசிய பேரிடர் மீட்புக் குழு, ராணுவம், கப்பற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் நாளை (ஜூன் 12) வரை அனல் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை