புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் காலமானார்: அனைத்துக்கட்சியினர் இறுதி அஞ்சலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் காலமானார்: அனைத்துக்கட்சியினர் இறுதி அஞ்சலி

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் இன்று அதிகாலை காலமானார். அவரது உடலுக்கு அனைத்துக்கட்சியினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி முன்னாள் முதல்வரும், திமுக உயர்நிலை செயல்திட்ட உறுப்பினராக இருந்தவர் ஆர். வி. ஜானகிராமன் (78).

இவர் சில மாதங்களாக  உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி  மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்த்து உடல்நலம் விசாரித்தனர்.

அவரது உடல் நிலை நேற்று மாலை மிகவும் மோசமடைந்தது. அவருக்கு டாக்டர்கள்  தீவிர சிகிச்சை அளித்தனர்.

இன்று அதிகாலை 2. 30 மணியளவில் மரணமடைந்தார்.

இதையடுத்து அவரது உடல் ஆம்பூர் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல்  வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த 1996ம் ஆண்டில் இருந்து 2000ம் ஆண்டு வரை ஜானகிராமன் புதுச்சேரி முதல்வராக பதவி வகித்து வந்தார்.

திமுக அமைப்பாளராகவும்  பணியாற்றியுள்ளார். நாளை காலை 10. 30 மணிக்கு ஜானகிராமன் உடல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில்  நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

.

மூலக்கதை