ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுச்சேரியில் 12ம் தேதி மனித சங்கிலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுச்சேரியில் 12ம் தேதி மனித சங்கிலி

புதுச்சேரி: ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பு தொடர்பாக புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சி தலைமையில் கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம்  காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

முதல்வர்  நாராயணசாமி, திமுக வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்பி. சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர்  விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெருமாள், விசிக முதன்மை செயலாளர் தேவ. பொழிலன், அமைப்பு செயலாளர் அமுதவன்,  மதிமுக கபிரியேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்குபின் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்ட அகழ்வாராய்ச்சிக்காக பல நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளனர் என தகவல்  வந்தபோது, புதுச்சேரியில் இந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என அறிவித்தோம்.

தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு  வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது என்ற தகவல் வந்தவுடன், இத்திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்க முடியாது என பிரதமருக்கும்,  பெட்ரோலியத்துறை அமைச்சருக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் வரும் 12ம் தேதி விவசாய  அமைப்புகள் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம், புதுச்சேரியில் பல  மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு கேட்டுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகள்,  விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.

அவர்களும் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுச்சேரியிலும் வரும் 12ம்தேதி மனிதசங்கிலி போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளோம்.   அன்று மாலை முத்தியால்பேட்டை மார்க்கெட்டில் இருந்து வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

இதை  தொடர்ந்து இத்திட்டம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல பகுதிகளுக்கு சென்று தெருமுனை பிரச்சாரம் செய்வதெனவும் முடிவு  எடுக்கப்பட்டுள்ளது.   இவ்வாறு கூறினார்.

.

மூலக்கதை