அரசு பஸ், லாரி அடுத்தடுத்து மோதல் ஒரே குடும்பத்தில் 3 பேர் பரிதாப பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரசு பஸ், லாரி அடுத்தடுத்து மோதல் ஒரே குடும்பத்தில் 3 பேர் பரிதாப பலி

சூளகிரி: அரசு பஸ், லாரி அடுத்தடுத்து மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு 50 பயணிகளுடன் அரசு பஸ் சென்றது.

இந்த பஸ்சை திருவண்ணாமலையை சேர்ந்த  சங்கர் ஓட்டி சென்றார். நடத்துனராகதிருவண்ணாமலையை சேர்ந்த மனோகரன் இருந்தார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம்  சூளகிரி அருகே சுண்டேகிரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, பஸ்சுக்கு முன்னால் பைக்கில் சென்று  கொண்டிருந்த நபர், திடீரென சாலையை கடக்க முயன்றார்.

இதனால் அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சென்டர் மீடியனில் மோதியது. இதில் பஸ்சின்  டயர்கள் கழன்று ஓடியதால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி சாலையோரமாக சென்று நின்றனர்.அவர்களை மாற்று பஸ்சில்  அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நேரத்தில் அதே வழியில் மற்றொரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

விபத்து நடந்திருப்பதை பார்த்து  அந்த பஸ்சின் டிரைவர் வண்டியை மெதுவாக ஓட்டி வந்து நிறுத்த முயன்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று, இந்த பஸ் மீது  மோதியது.

இதில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ்சில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்து  ஏற்படுத்திய லாரி, முதலில் விபத்தில் சிக்கிய பஸ்சின் பயணிகள் நின்றிருந்த கூட்டத்தில் புகுந்தது. பின்னர் அங்கிருந்த பள்ளத்தில் தலைக்குப்புற  கவிழ்ந்தது.

இந்த லாரி மோதியதில் அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியாகினர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சடலத்தை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் மற்ற பயணிகள் சிறுசிறு காயங்களுடன் உயிர் தப்பினர். சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தினர்.

இதில் இறந்தவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்தவர் கமால்பாஷா (32). இவர் பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.

இவரது மனைவி  சைதானி (29). இவர்களுக்கு முகமது சுகைதீன் (14), பௌனிஷா (12), நிசார் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

கமால்பாஷா குடும்பத்துடன்  பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது இந்த கோர விபத்தில் சிக்கி அவரது மனைவி மற்றும் 2  குழந்தைகள் இறந்துள்ளனர்.

.

மூலக்கதை