துபாயில் சாலை விதியை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ் விபத்து : 8 இந்தியர் உட்பட 17 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
துபாயில் சாலை விதியை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ் விபத்து : 8 இந்தியர் உட்பட 17 பேர் பலி

துபாய்: துபாய் நாட்டில் சாலை விதியை மீறி இயக்கப்பட்ட ஆம்னி பஸ் விபத்தில் சிக்கியதில், 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். இவர்கள் மஸ்கட்டில் ரம்ஜான் கொண்டாடிவிட்டு துபாய் திரும்பியபோது விபத்தில் சிக்கியுள்ளனர்.

விபத்தில் இறந்த இந்தியர்கள் குறித்த விபரங்களை சேகரிக்கும் பணியை இந்திய தூதரகம்  முடுக்கிவிட்டுள்ளது. துபாய் நாட்டில் இருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்கு ஓமன் நாட்டைச் சேர்ந்த தனியார் ஆம்னி பஸ் தினமும் 3 முறை இயக்கப்படுகிறது.

இந்திய நேரப்படி நேற்றிரவு 7. 30 மணியளவில் மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி 31 பயணிகளுடன் சென்ற ஆம்னி பஸ், அல் ரஸிதியாத் எக்ஸிட் என்ற பகுதியில் துபாய் சையத் பின் ஜயாத் சாலையில் சென்றது.

அப்போது, அல் ரஸிதியாத் எக்ஸிட் பகுதியில் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கும் வகையில், சாலையின் குறுக்கே உயரமான தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இதை கவனிக்காத ஆம்னி பஸ்சின் 50 வயது மதிக்கத்தக்க டிரைவர், பஸ்சை வேகமாக ஓட்டிச் சென்ற போது, சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த உயரமான தடுப்பின் மீது பஸ்சின் மேற்கூரை மோதியது. இதில், பஸ்சில் பயணித்த பயணிகள் பலர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த கோரவிபத்தில் பஸ் டிரைவர் உள்பட பலர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சில் உயிருக்கு போராடிய பலரையும் மீட்டு ராஸித் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இறந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தினர். அதில், பயணம் செய்த 31 பேரில் 17 பேர் பலியானதும், டிரைவர் உட்பட 5 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெறுவதும் உறுதிசெய்யப்பட்டது.

இதுகுறித்து துபாய் போலீஸ்துறை தலைவர் மேஜர் அப்துல்லா அல் மார்ரீ கூறுகையில், ‘மஸ்கட் நகருக்கு ரம்ஜான் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக சென்றவர்கள்,  அங்கிருந்து துபாய் திரும்பினர். அப்போது நடந்த விபத்தில் பலியான 17 பேரும் வெவ்வேறு நாட்டைச்  சேர்ந்தவர்கள்.

5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விதிமுறை மீறி ஓமன் பஸ், அல் ரஸிதியாத் எக்ஸிட் வழியாக சென்றதால், விபத்து நடந்துள்ளது.

டிரைவர் எதனால், இந்த சாலையில் உயரமான ஆம்னி பஸ்சை இயக்கினார் என்பது தெரியவில்லை. டிரைவரிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை.



இதுதொடர்பாக ஓமன் நாட்டின் பஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். விபத்தில் பலியானவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறோம்’’ என்றார். இதுகுறித்து, ஓமன் நாட்டின் ஆம்னி பஸ் நிறுவனம் ‘எம்வாசால்ட்’ வெளியிட்ட அறிக்கையில், ‘எதிர்பாராதவிதமாக துபாயில் (வழித்தடம் 201) விபத்து நடந்துள்ளது.

எங்களது வாடிக்கையாளர்களின் இழப்பை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மன்னிப்பு கோருகிறோம்.

உடனடியாக நிவாரணம் மற்றும் உதவிக்கான ஏற்பாடுகளை செய்துவிடுகிறோம். இன்றைய தினம், துபாய் - மஸ்கட் பஸ் போக்குவரத்தை ரத்து செய்துவிட்டோம்’ என்று தெரிவித்துள்ளது.



இதற்கிடையே, இன்று அதிகாலை துபாய் நாட்டுக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘துபாய் ஆம்னி பஸ் விபத்தில் பலியானவர்களில் 8 பேர் இந்தியர்கள். அவர்களின் பெயர், மாநிலம் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

அதன்பின் உறவினர்களுக்கு தகவல் சொல்லப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று கூறியுள்ளது. வளைகுடா நாடுகளில் அதிகளவில் பணிபுரியும் கேரளா, தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களின் உறவினர்கள், விபத்தில் சிக்கியவர்கள் தொடர்பான விபரங்களை இந்திய தூதரகம் மூலம் கேட்டறிந்து வருகின்றனர்.

‘துபாய் அரசு நிர்வாகத்தின் நடைமுறைகள் முடிந்த பின்னர்தான், முழுவிபரங்கள் கிடைக்கும்’ என்று கூறப்படுகிறது.

.

மூலக்கதை