தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா: நெருக்கடியான நேரத்தில் ரோகித் சர்மா சிறந்த இன்னிங்ஸ்... கேப்டன் விராட் கோஹ்லி பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா: நெருக்கடியான நேரத்தில் ரோகித் சர்மா சிறந்த இன்னிங்ஸ்... கேப்டன் விராட் கோஹ்லி பாராட்டு

சவுத்தாம்டன்:  இங்கிலாந்தில் நடந்துவரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுத்தாம்டனில் நேற்று நடந்த 8வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக மோரீஸ் 34 பந்தில் 42ரன் எடுத்தார். கேப்டன் டூபிளிசிஸ் 38,  பெலுக்வாயோ 34, மில்லர் 31, ரபாடா 31 ரன்கள் எடுத்தனர்.

இந்திய பந்து வீச்சில் சஹால் 4, பும்ரா, புவனேஸ்வர்குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 228 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 47. 3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தவான் 8, கேப்டன் கோஹ்லி 18, கே. எல். ராகுல் 26, டோனி 34 ரன்களில் ஆட்டம் இழந்தனர். ரோகித்சர்மா 144 பந்தில் 13 பவுண்டரி 2 சிக்சருடன் 122 ரன், ஹர்த்திக் பாண்டியா 7 பந்தில் 15 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.ரோகித்சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கி உள்ள இந்தியா அடுத்ததாக வரும் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

முதல் போட்டியில் இங்கிலாந்து, 2வது போட்டியில் வங்கதேசத்திடம் ஏற்கனவே தோல்வி அடைந்திருந்த தென்ஆப்ரிக்கா, நேற்று 3வது தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அந்த அணி வரும் 10ம் தேதி வெஸ்ட் இண்டீசுடன் மோதுகிறது.

வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், நீண்ட காத்திருப்புக்கு பின்னர் நல்ல போட்டி கிடைத்திருக்கிறது இந்த தொடர் முழுவதும் சவால் நிறைந்தது. இதனை சரியாக தொடங்குவது முக்கியம்.

முழுமையான ஒரு வெற்றி கிடைத்துள்ளது. டாஸ் வென்றிருந்தாலும் நாங்கள் பந்து வீச்சை தான் தேர்வு செய்திருப்போம்.

பிட்ச் ஆரம்பத்தில் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பும்ரா 2 விக்கெட் எடுத்து நெருக்கடி அளிக்க முடிந்தது. ரோகித்சர்மா நெருக்கடியான நேரத்தில் ஒரு சிறந்த இன்னிங்ஸ் ஆடி உள்ளார், என்றார்.

தென்ஆப்ரிக்கா கேப்டன் டூபிளசிஸ் கூறியதாவது:
இந்தியாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

சிறந்த வேகம் மற்றும் சுழற்பந்து வீச்சை கொண்டுள்ளனர். மிடில் ஓவர்களில் ரன் எடுக்க முடியாமல் விக்கெட் எடுத்தனர்.   நாங்கள்  மிடில் ஓவர்களில் நெருக்கடி அளித்தாலும் விக்கெட் எடுக்க முடியவில்லை. ரோகித்சர்மா அதிர்ஷ்டசாலி. சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்து விட்டார்.

இந்த பிட்ச் நன்றாக இருந்தது. எங்கள் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

கூடுதலாக ஒரு ஸ்பின்னர் சேர்த்த நிலையில் நாங்கள் போதிய ரன் எடுக்க வில்லை, என்றார். ஆட்டநாயகன் விருது பெற்ற ரோகித்சர்மா கூறுகையில், பிட்ச் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது.இதனால் எனது இயற்கையான விளையாட்டை ஆட முடியவில்லை. இதனால் சூழ்நிலைக்கு ஏற்ப நிதானமாக ஆடினேன்.

அணி ஒன்று அல்லது 2 பேட்ஸ்மேன்களை சார்ந்து இருக்க முடியாது. இங்கிலாந்தில் இதற்கு முன் கோடையில் விளையாடி இருக்கிறோம்.

ஆனால் தற்போது குளிர்கால வானிலை நாள் முழுவதும் நன்றாக இருந்தது. வியர்வையே இல்லை, என்றார்.

2 விக்கெட் வீழ்த்திய பும்ரா கூறுகையில், ‘பந்து புதிதாக இருக்கும் போதே டெஸ்ட் போட்டிகளைப்போல பவுலிங் செய்வதே இந்திய பவுலர்களின் திட்டம். அந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடிந்ததால், இன்று தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களை விரைவாக அவுட்டாக்க முடிந்தது. ’ என்றார்.கங்குலியை முந்திய ரோகித்
நேற்று ரோகித் சர்மா அடித்தது 23வது சதமாகும். இதன் மூலம் அதிக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலியை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு முன்னேறினார்.   சச்சின் -49,விராட் கோஹ்லி -41, ரோகித் சர்மா -23,கங்குலி -22,,தவான் - 16, சேவாக் 15 சதம் அடித்துள்ளனர்.சேசிங்கில் அதிக சதம்
விராட் கோஹ்லி  (இந்தியா) - 25 சதம்
சச்சின் (இந்தியா)            - 17 சதம்
கெயில் (விண்டீஸ்)          - 12 சதம்
தில்ஷன் (இலங்கை)/ ரோகித் (இந்தியா) -11 சதம்

ஆஸி. , சாதனை காலி
உலக கோப்பையில் ரோகித் நேற்று தனது 2வது சதத்தை பதிவு செய்தார். இது உலகக்கோப்பை அரங்கில் இந்திய சார்பில் அடித்த 26வது சதமாக அமைந்தது.

இதன் மூலம் உலகக்கோப்பை அரங்கில் அதிக தனிநபர் சதம் அடித்த ஆஸ்திரேலிய அணியின் (26 சதம்) உலக சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார்.

வெற்றியில் 50
விராட் கோஹ்லி  தலைமையின் கீழ் ஒருநாள் போட்டிகளில் இந்தியா நேற்று 50வது வெற்றியை ருசித்தது.

அவரின் தலைமையில் இந்தியா 69 போட்டிகளில் ஆடி உள்ளது. உலக அளவில் வெஸ்ட்  இண்டீசின் லாய்ட் 63 போட்டியிலும், ஆஸி. யின் ரிக்கி பாண்டிங் 63 போட்டியிலும், தென்ஆப்ரிக்காவின் குரோஞ்ச் 68 போட்டிகளிலும் 50வது வெற்றியை பெற்றுள்ளனர்.

அந்த வரிசையில் கோஹ்லி 4வது இடத்தை பிடித்துள்ளார்.இன்றைய போட்டி
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ்
நாட்டிங்காம், பிற்பகல் 3. 00 மணி

.

மூலக்கதை