ஜூன் 21- ந் தேதி சர்வதேச யோகா தினம்- ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

வரும் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகின்றது. ராஞ்சியில் நடக்கும் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

யோகாவும், தியானமும் நம் மனதையும், உடலையும் கட்டுப்படுத்தி, பக்குவப்படுத்தி சுறுசுறுப்பாக வைத்திருக்கும் சிறப்பு பெற்றவை. அதனாலேயே யோகா, அண்மைக்காலமாக முக்கியத்துவம் பெற்று வருகின்றது.

இன்று, நேற்றல்ல, கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் யோகா பயிற்சி நடைமுறையில் உள்ளது.
உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக, வருடத்தில் ஒரு நாளை,  சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார்.  ஐ.நா. சபையும் அதனை ஏற்றுக் கொண்டு,  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது.

அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு டெல்லியில் நடந்த பிரமாண்ட விழாவில் 191 நாட்டு பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியும் பங்கேற்று யோகா செய்தார்.

2016-ம் ஆண்டு சண்டிகரிலும், 2017-ம் ஆண்டு லக்னோவிலும், 2018-ம் ஆண்டு டேராடூன் நகரிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு 5-வது ஆண்டாக வருகிற 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் இந்த தினத்தை எந்த நகரில் கொண்டாடலாம் என்று பிரதமர் அலுவலகம் ஆய்வு செய்தது.

டெல்லி, சிம்லா, மைசூர், ஆமதாபாத், ராஞ்சி ஆகிய 5 நகரங்கள் இதற்காக ஆய்வு செய்யப்பட்டன. இறுதியில் ராஞ்சி நகரில் வருகிற 21-ந்தேதி சர்வதேச யோகா தினத்தை கொண்டாட  முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ராஞ்சியில் நடக்கும் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகா செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு அதிகாரிகள் செய்யத் தொடங்கி உள்ளனர்.

மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் பெரிய அரசு நிகழ்ச்சி இதுதான். எனவே வருகிற 21-ந்தேதி சர்வதேச யோகா தினத்தை மிகப் பிரமாண்டமான விழாவாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மூலக்கதை