டோனி, ராகுல் விளாசலில் சுருண்டது வங்கதேசம்: மற்றொரு போட்டியில் நியூசி.யை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டோனி, ராகுல் விளாசலில் சுருண்டது வங்கதேசம்: மற்றொரு போட்டியில் நியூசி.யை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்

கார்டிப்:  டோனி, ராகுலின் அதிரடி சதங்களால் நேற்று கார்டிப்பில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பிரிஸ்டலில் நடந்த மற்றொரு போட்டியில் நியூசிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகளிடம் 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.   கார்டிப்பில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.   இந்திய அணியின் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் கோஹ்லி 47 ரன்கள் எடுத்தார். 22 ஓவர்களில் 4 விக்கெட்டுகளுக்கு 102 ரன்கள் என இந்திய அணி திணறிய போது லோகேஷ் ராகுல்-டோனி ஜோடி கை கொடுத்தது.ராகுல் 99 பந்துகளில் 108 ரன்கள்(12 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். டோனி 78 பந்துகளில் 113 ரன்களை (8 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார்.

இறுதியில் 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்களை குவித்தது. வங்கதேசம் தரப்பில் ருபெல் ஹூசைன், ஷாகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

360 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய வங்கதேச அணி, 49. 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.   வங்கதேச அணி சார்பில் லியன் தாஸ் 73 ரன்கள், சவுமியா சங்கர் 25 ரன்கள், முஷ்டாபிகர் ரஹிம் 90 ரன்கள், மெஹிடி ஹசன் 27 ரன்கள் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்திய அணி சார்பில்  குல்தீப் யாதவ், சாஹல் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.மேற்கிந்திய தீவுகள் வெற்றி பிரிஸ்டல்: பிரிஸ்டலில் நடந்த மற்றொரு பயிற்சி ஆட்டத்தில், நியூசிலாந்து-மேற்கிந்திய தீவு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 49. 2 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 421 ரன்களை குவித்தது.

ஓபனர்கள் கிறிஸ் கெயில் 36 ரன்கள், எவின் லூயிஸ் 50 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை தந்தனர். ஷாய் ஹோப் அதிரடியாக ஆடி 86 பந்துகளில் 101 ரன்கள் (9 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார்.

கேப்டன் ஜேசன் ஹோல்டர் 47 ரன்கள், ஆண்ட்ரே ரஸல் 54 ரன்கள் குவித்தனர். நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 50 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.422 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 47. 2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 85 ரன்கள், டாம் பிளன்டெல் 106 ரன்கள், சோதி 39 ரன்கள் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணியின் கார்லோஸ் பிராத்வெயிட் 3 விக்கெட், பேபியான் ஆலன் 2 விக்கெட் வீழ்த்தினர்.  

.

மூலக்கதை