சர்வதேச செஸ் ரேட்டிங் பட்டியலில் மேலூர் பள்ளி மாணவர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்வதேச செஸ் ரேட்டிங் பட்டியலில் மேலூர் பள்ளி மாணவர்கள்

மேலூர்: சர்வதேச செஸ் ரேட்டிங் (ஃபிடே) பட்டியலில் மேலூர் அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள அ. செட்டியார்பட்டி துவக்கப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மாவட்ட, மாநில அளவிலான செஸ் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வெற்றி பெற்று வருகின்றனர். கடந்த ஓராண்டாக சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளிலும் பங்கேற்று இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர்.

குறிப்பாக இப்பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எஸ். தேவ்நாத், எம். சந்தோஷ் மற்றும் மாணவி சி. கலைச்செல்வி ஆகியோர் சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் வெற்றி பெற்று முத்திரை பதித்தனர்.

இதையடுத்து இவர்கள் 3 பேரின் பெயர்களும் தற்போது உலக அளவில் செஸ் போட்டியில் தொடர் வெற்றி பெறுபவர்களை பட்டியலிடும் ‘சர்வதேச சதுரங்க அமைப்பு’ (ஃபிடே) வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ஃபிடே வெளியிட்டுள்ள பட்டியலில் தேவ்நாத், ஸ்டாண்டர்ட் பிரிவில் 1,092 ரேட்டிங், பிலிட்ஜ் பிரிவில் 1,108 ரேட்டிங் பெற்றுள்ளார். சந்தோஷ், ஸ்டாண்டர்ட் பிரிவில் 1,057 ரேட்டிங், பிலிட்ஜ் பிரிவில் 1,098 ரேட்டிங் பெற்றுள்ளார்.

கலைச்செல்வி, பிலிட்ஜ் பிரிவில் 1,035 ரேட்டிங் பெற்றுள்ளார்.

சர்வதேச ரேட்டிங்கில் இடம் பிடித்து சாதனை படைத்த இவர்கள் 3 பேரையும் பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலை, ஆசிரியரும், பயிற்சியாளருமான செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் சியாமளா, பூமாதேவி ஆகியோர் பாராட்டினர்.

.

மூலக்கதை