சாரதா சிட் பண்ட் ஊழல் வழக்கு: ராஜீவ் குமாரை இன்று கைது செய்ய சிபிஐ முடிவு...!

தினகரன்  தினகரன்
சாரதா சிட் பண்ட் ஊழல் வழக்கு: ராஜீவ் குமாரை இன்று கைது செய்ய சிபிஐ முடிவு...!

டெல்லி: கொல்கத்தா மாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை இன்று கைது செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது. மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் சாரதா குரூப் நிறுவனம் சிட் பண்ட் நடத்தி, அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, அப்பாவி மக்களின் முதலீடுகளை கோடிக்கணக்கில் சுருட்டியது. இந்த முறைகேட்டில் சிட்பண்ட் நடத்தியவர்களுக்கு, போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு தொடர்புகள் இருப்பதால் இது குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு முன் சாரதா சிட் பண்ட் வழக்கு குறித்து விசாரிக்க, மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்திருந்தது. அப்போது, இதன் விசாரணை குழு தலைவராக இருந்த கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார், இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப்கள் போன்றவற்றை குற்றவாளிகளிடம் திருப்பி கொடுக்க அனுமதித்துள்ளார். மேலும், இந்த மோசடியில், அரசியல்வாதிகள் தொடர்புடைய முக்கிய ஆவணங்களை எல்லாம் அவர் அழித்து விட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது. இது தொடர்பாக இவரிடம் விசாரிக்க கடந்த ஜனவரி மாதம் சிபிஐ முயற்சி எடுத்தது. ஆனால், மேற்கு வங்க போலீசார் சிபிஐ அதிகாரிகளை, போலீஸ் கமிஷனர் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. சிபிஐ அதிகாரிகள் சிலரையும் உள்ளூர் போலீசார் பிடித்துச் சென்றனர். மேலும், ராஜிவ் குமாருக்கு ஆதரவாக, முதல்வர் மம்தா பானர்ஜியே போலீஸ் கமிஷனர் இல்லம் முன் தர்ணா நடத்தினர். இது மத்திய அரசுடன் மோதலை ஏற்படுத்தியது. இதையடுத்து ராஜிவ் குமார், ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ உத்தரவிட்டது. ஆனால், இந்த விசாரணை சிபிஐ அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த மனுவில், ‘விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ராஜிவ் குமார் மழுப்பலாகவும், திமிராகவும் பதில் அளித்தார். அதனால், இவரை கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என கூறப்பட்டது. இதில், முன்ஜாமீன் கேட்டு ராஜிவ் குமார் தாக்கல் செய்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் அவரை ஒரு வாரத்துக்கு கைது செய்ய தடை விதித்தது. இதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு அளிக்கப்பட்ட சட்ட பாதுகாப்பை கடந்த 17ம் தேதி விலக்கிக் கொண்டது. இதையடுத்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ராஜிவ் குமார் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் வெளிநாடு தப்பிச் செல்லலாம் என்பதால், அவரை தேடப்படும் நபராக சிபிஐ நேற்று அறிவித்தது. இதற்கான, லுக் அவுட் நோட்டீசை அது வெளியிட்டது. இது நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் குடியுரிமை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் இன்று ஆஜராக சி.பி.ஐ சம்மன் அனுப்பிய நிலையில் ராஜீவ் குமார் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியானதை தொடர்ந்து கைது செய்ய திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை