மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்: பாக். பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்: பாக். பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு

இஸ்லாமாபாத்:  பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற இம்ரான்கான் விரும்புவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி  நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவங்களுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான  உறவு மேலும் மோசமானது.  இந்நிலையில், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார் மோடி. அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இது பற்றி பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமர் இம்ரான்கான் 2வது முறையாக பிரதமராகும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். தெற்கு ஆசியாவில் அமைதி, வளர்ச்சி, செழிப்பு பெருக மோடியுடன் இணைந்து பணியாற்ற அவர் விரும்புகிறார். இருநாட்டு மக்களின் நலன் கருதி இருநாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் கொண்டுள்ளார்’ என பதிவிட்டுள்ளார். முன்னதாக, தேர்தல் முடிவு வெளியானதுமே டிவிட்டர் மூலமாக மோடிக்கு இம்ரான் வாழ்த்து கூறியிருந்தார்.

மூலக்கதை