தெரசா மே பதவி விலகுவதால் இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிட 8 பேர் விருப்பம்

தினகரன்  தினகரன்
தெரசா மே பதவி விலகுவதால் இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிட 8 பேர் விருப்பம்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்ய உள்ள  நிலையில் புதிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதற்கு இதுவரை 8 பேர் தயாராக இருக்கின்றனர். ஐரோப்பியன் யூனியன் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான பிரக்சிட் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற முடியாததால், தனது பிரதமர் பதவியை ஜூன் 7ம் தேதி தெரசா மே ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாள் பயணமாக இங்கிலாந்து வருகிறார். அவர் வந்து சென்ற பின்னர் தெரசா மே பதவி விலகுகிறார். இதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் வருகிற 10ம் தேதி முதல் தொடங்கும். இதனிடையே, பிரதமர் ராஜினாமா செய்வதற்கு முன்னதாகவே பிரதமர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராக இருப்பவர்கள் அறிவிப்புக்களை வெளியிட தொடங்கியுள்ளனர். பிரதமர் தெரசா மே அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தவர் போரீஸ் ஜான்சன். ஆனால், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் முடிவில் பிரதமர் தெரசா மேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பதவியை ராஜினாமா செய்தவர். இவர் பிரதமருக்கான தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த முறை போரீஸ், கடைசி நேரத்தில் தனது முடிவை கைவிட்டார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைக்கேல் கோவ். இவர் போரீஸ் ஜான்சனுக்கு சாவல் விடுத்துள்ள மற்றொரு எம்பி.யாவார். இது குறித்து லண்டனில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த மைக்கேல் கூறுகையில், \' நாட்டின் பிரதமர் ஆவதற்கான தேர்வில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன். பிரக்சிட் விவகாரத்தில் கன்சர்வேடிவ் மற்றும் யூனியன் கட்சியை ஒன்றிணைத்து பிரக்சிட்டை நிறைவேற்ற முடியும் என நான் நம்புகிறேன். நான் நாட்டிற்கு தலைமை தாங்குவதற்கு தயாராக இருக்கிறேன்,\' என்றார்.இவர்களை தவிர முன்னாள் பிரக்சிட் செயலாளர் டோமினிக் ராப், முன்னாள் நாடாளுமன்ற தலைவர் ஆன்ட்ரியோ லீட்சம் ஆகியோரும் தாங்கள் தலைமையேற்க விரும்புவதாக பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது. வெளியுறவு துறை இணை செயலாளர் ஜெரிமி ஹன்ட், சர்வதேச மேம்பாட்டு செயலர் ரோரி ஸ்டீவார்ட், சுகாதார செயலர் மாட் ஹான்காக், முன்னாள் பணி மற்றும் பென்சன் செயலாளர் மிக்வே எஸ்தர் உள்ளிட்டோரும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்தில் ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர் தாமாகவே பிரதமராகவும் நியமிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை தலைவர், பிரதமருக்கான இறுதி போட்டியில் முன்னாள் நாடாளுமன்ற தலைவர் ஆன்ட்ரியோ லீட்சம், தெரசா மே ஆகியோர் இருந்தனர். கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகுவதாக லீட்சம் அறிவித்ததால் தெரசா மே பிரதமரானார்.

மூலக்கதை