ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு அதானியின் நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதியா? 3 வாரத்தில் முடிவு

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு அதானியின் நிலக்கரி சுரங்கத்துக்கு அனுமதியா? 3 வாரத்தில் முடிவு

மெல்போர்ன்: பிரபல தொழில் அதிபர் அதானியின் கார்மிச்சைல் நிலக்கரி சுரங்கம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. இந்த சுரங்கத்தில் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியை அனுமதிப்பது குறித்த இறுதி முடிவு, மூன்று வாரத்தில் எடுக்கப்படும்  என்று அந்த நாட்டில் உள்ள குயின்ஸ்லேண்டு மாகாணத்தின் முதல்வர் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய இந்த திட்டம் குறித்து விரைவில் முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் அனுமதி கிடைத்ததும் சில வாரங்களில் பணியை துவக்கிவிடுவோம் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக சர்ச்சை நீடிப்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் திட்டம் முடங்கியுள்ளது  குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லேண்டு மாகாணத்தின் மத்தியில் உள்ள காலிலீ படுகை பகுதியில் கார்மிச்சைல் நிலக்கரி சுரங்கத்தை கடந்த 2010ல் அதானி குழுமம் வாங்கியது. நாட்டின் வடபகுதியில் உள்ள போவென் அருகே அபோட் பாயிண்ட் துறைமுகம் அருகே இந்த நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டால், கிரேட் பாரியர் ரீப் வேல்டு ஹெரிடேஜ் பகுதியில்  சுற்றுச்சூழல் பெரும் அளவில் பாதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பு, நிலக்கரி துகள்களால் ஏற்படும் பாதிப்பு ஆகியவை குறித்து அடுத்த மூன்று வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும். அதன் பின்னர் நிலக்கரி சுரங்கத்திற்கு அனுமதி கொடுப்பது குறித்து முடிவு அறிவிக்கப்படும்  என்று குயின்ஸ்லேண்டு முதல்வர் அன்னஸ்டாசியா பாலஸ்சுக் தெவித்தார்.

மூலக்கதை