ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு ஜிஎஸ்டி ரீபண்ட் விரைவாக கிடைக்கும்: நடைமுறையில் மாற்றம் வருகிறது

தினகரன்  தினகரன்
ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு ஜிஎஸ்டி ரீபண்ட் விரைவாக கிடைக்கும்: நடைமுறையில் மாற்றம் வருகிறது

புதுடெல்லி: ஜிஎஸ்டி ரீபண்ட் விரைவாக  கிடைக்கும் வகையில், ஆகஸ்ட் மாதத்தில் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படுகின்றன. இரண்டு அதிகாரிகள் சரிபார்ப்புக்கு பதில், ஒரே அதிகாரி சரிபார்ப்பின் மூலம் ரீபண்ட் வழங்க  திட்டமிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017 ஜூலை மாதத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து வணிகர்கள் பல இன்னல்களை சந்தித்தனர். பின்னர் ஜிஎஸ்டியில் பல்வேறு மாற்றங்கள்  கொண்டுவரப்பட்டன. ஜிஎஸ்டி கணக்கு தாக்கல், வரி விதிப்புகளில் மாநிலங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள் கோரிக்கைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டன. இருப்பினும், ஜிஎஸ்டி ரீபண்ட் கிடைப்பதில் தாமதம் ஆவது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் தங்கள் முதலீடுகள் முடக்கி விடுகின்றன. தொழில் அபிவிருத்திகள் பாதிக்கப்படுகிறது என தொழில்துறையினர் தொடர்ந்து குற்றம் சாட்டி  வந்தனர். மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், ஜிஎஸ்டி நடைமுறையில் புதிய மாற்றங்களை கொண்டுவர உத்தேசித்துள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர்  தெரிவித்தார். தற்போதைய நடைமுறையின்படி, ஜிஎஸ்டி செலுத்துபவர் வரி ரீபண்ட் கோரி தாக்கல் செய்தால்,  சம்பந்தப்பட்ட மண்டல எல்லைக்கு உட்பட்ட மத்திய வரி அதிகாரி, ஜிஎஸ்டி ரீபண்டில் 50 சதவீத தொகையை வழங்க ஒப்புதல் அளிக்கிறார். எஞ்சிய 50 சதவீத தொகையை மாநில வருமான வரி அதிகாரி அளிக்க வேண்டும். முன்னதாக, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் விசாரணை நடத்திய பிறகே இந்த தொகையை வழங்க ஒப்புதல் அளிக்கிறார்.   மத்திய அரசும் மாநில அரசும் சரிபாதியாக பிரித்து ரீபண்ட் தொகையை வழங்குகின்றன. இதனால் ஜிஎஸ்டி ரீபண்ட் பெறுவதில் மிகுந்த தாமதம் ஆகிறது.  இனி, ஒரே அதிகாரி மூலம் ஜிஎஸ்டி ரீபண்ட் முடிவு செய்யப்பட இருக்கிறது. அதாவது, மத்திய அல்லது மாநில அதிகாரியிடம் ஜிஎஸ்டி ரீபண்ட் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், ஒரு அதிகாரி மட்டுமே விண்ணப்பத்தை பரிசீலனை செய்வார்.  இரண்டு அடுக்கு நடைமுறை இனி இருக்காது. அதிகாரி பரிசீலனை செய்து ஒப்புதல் அளித்ததுமே ஜிஎஸ்டி ரீபண்ட் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும். வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த புதிய நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

மூலக்கதை