பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை; 25 மாநிலங்களுக்கு ரூ.1 கோடி அபராதம்

தினமலர்  தினமலர்
பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை; 25 மாநிலங்களுக்கு ரூ.1 கோடி அபராதம்

புதுடில்லி: பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது தொடர்பான செயல் திட்டம் குறித்த அறிக்கையை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்பிக்காத 25க்கும் அதிகமான மாநிலங்கள் தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைவதை பற்றி விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த ஆண்டு துவக்கத்தில் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்தது. அதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது தொடர்பான செயல் திட்ட அறிக்கையை ஏப். 30க்குள் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்பிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது.

தாக்கல் செய்யாத மாநிலங்கள் மாதம் ஒரு கோடி ரூபாய் வீதம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அபராதம் செலுத்த வேண்டும்' எனகூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏப். 30ம் தேதி முடிந்து மே 30ம் தேதிக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன. ஆனால் ஆந்திரா. புதுச்சேரி. சிக்கிம். மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே செயல் திட்ட அறிக்கையை மத்திய மாசு கட்டுப்பாட்டு திட்டத்திடம் தாக்கல் செய்துள்ளன.

இது பற்றி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் கூடுதல் இயக்குனர் எஸ்.கே.நிகம் கூறியதாவது: பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் எங்கள் உத்தரவை மாநிலங்கள் மதிக்காததால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தோம். இப்போது தீர்ப்பாயத்தின் உத்தரவையும் அவர்கள் மதிக்கவில்லை. அதனால் அதற்கான அபராதத்தை அவர்கள் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.

மூலக்கதை