2 காங்., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்?

தினமலர்  தினமலர்
2 காங்., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்?

பெங்களூரு: கர்நாடகாவில், ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தும் விதத்தில், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் இருவர், பா.ஜ.,வில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் இருவரும், பா.ஜ., மூத்த தலைவர்கள், எடியூரப்பா மற்றும் எஸ்.எம்.கிருஷ்ணாவை, நேற்று ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர்.

காங்., ஆதரவு:

கர்நாடகாவில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு, காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மொத்தம், 225 தொகுதிகள் உள்ள சட்டசபையில், குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு, 37 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். காங்கிரசுக்கு, 79 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். எனினும், முதல்வர் பதவி, குமாரசாமியிடம் உள்ளதால், காங்கிரசில் பலத்த அதிருப்தி நிலவுகிறது.

எதிரணியில் உள்ள, பா.ஜ., வசம், 105 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதனால், அங்கு அவ்வப்போது, கட்சி தாவல்கள் குறித்த செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன. எட்டு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்தால், ஆட்சியை, பா.ஜ., கைப்பற்றி விடும் என்ற நிலை காணப்படுகிறது. இந்நிலையில், காங்., அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்களான, ரமேஷ் ஜர்கிஹோலி மற்றும் சுதாகர், பெங்களூரில் உள்ள, பா.ஜ., மூத்த தலைவர், முன்னாள் முதல்வர், எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டுக்கு நேற்று சென்று, பல மணி நேரம் பேசினர். அப்போது, கர்நாடகா, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான, எடியூரப்பாவும் இருந்துள்ளார்.

சுயேச்சை:

இதனால், அவ்விரு, எம்.எல்.ஏ.,க்களும், பா.ஜ.,வில் சேர்ந்து விட்ட தாக தகவல் பரவியது. எனினும், அதை, அக்கட்சி ஊர்ஜிதப்படுத்தவில்லை. சில நாட்களுக்கு முன் முடிந்த, லோக்சபா தேர்தலில், 25 இடங்களில், பா.ஜ., தலா, ஒரு இடத்தில், காங்., மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளன. ஒரு இடத்தில், சுயேச்சையாக நடிகை, சுமலதா வென்றுள்ளார்.

பா.ஜ.,வில் சேருவதா அல்லது அக்கட்சிக்கு ஆதரவளிப்பதா என்பது பற்றி, மாண்டியா மாவட்ட மக்களுடன் விவாதித்த பின் முடிவு செய்வேன்,'' என, நடிகையும், சுயேச்சை எம்.பி.,யுமான சுமலதா தெரிவித்தார்.

மூலக்கதை