நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் அடுத்தடுத்த பரபரப்பு: பீகாரில் காங்கிரஸ் - லாலு கட்சி உறவில் விரிசல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடாளுமன்ற தேர்தல் தோல்வியால் அடுத்தடுத்த பரபரப்பு: பீகாரில் காங்கிரஸ்  லாலு கட்சி உறவில் விரிசல்

பாட்னா: நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற கட்சிகளின் நிர்வாகிகள் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா கடிதம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பீகாரில் காங்கிரஸ் லாலு கட்சியின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, தங்களது பதவியை தொடர விரும்பமில்லை என்று முதல்வர்கள் மம்தா, கமல்நாத் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.   மேற்கு வங்கத்தில் கடும் வன்முறைகளுக்கு இடையே நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

கடந்த முறை 2 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த பாஜஇம்முறை 18 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கடந்த முறை 34 தொகுதிகளில் வென்றிருந்த நிலையில், இம்முறை 22 இடங்களை மட்டுமே பெற்றது.

8 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 4 இடங்களில் பாஜ வென்றுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் 3 தொகுதிகளை மட்டுமே தக்க வைத்தது.

மாநிலத்தில் பாஜவின் வாக்கு சதவீதம் 40. 25 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தேர்தல் தோல்வி குறித்து கூறியதாவது: கடந்த 5 மாதங்களாக தேர்தல் பணி செய்வதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டது.

மத்தியப் படைகள் அனைத்தும் எங்களுக்கு எதிராக செயல்பட்டது. வாக்குகளுக்காக இந்து, முஸ்லிம் இடையே பிரிவினை ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் பாஜ மீது நடவடிக்கை இல்லை. நாங்கள் காங்கிரஸ் போன்று அடிபணியவும் இல்லை.

எனக்கு முதல்வராகத் தொடர விருப்பமில்லை. இதை கூட்டம் தொடங்கும்போதே கட்சியினரிடையே அறிவித்துவிட்டேன்.

ஆனால், கட்சியினர் எனது விருப்பத்தை ஏற்கவில்லை.   இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையில் அமைந்த மெகா கூட்டணி, ஒரு தொகுதியில் கூட வெற்றிக் கணக்கை தொடங்காத நிலையில், காங்கிரஸ் கட்சி மட்டும் கிஷண்கஞ்ச் தொகுதியில் வெற்றிபெற்றது.

தற்போது தோல்விக்கு ஒட்டுமொத்தக் காரணமும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. முதல் சர்ச்சையை காங்கிரஸ் கட்சியே தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பீகார் காங்கிரஸ் தலைவர் கவுகாப் கூறுகையில், ‘‘2020ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதே சரியாக இருக்கும். ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்காமல் சொந்த பலத்திலேயே காங்கிரஸ் தேர்தலை சந்திக்க வேண்டும்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி, அவரது தந்தை லாலு அளவிற்கு பலம் உடையவர் அல்ல’’ என்றார்.

இவரது கருத்தால், காங்கிரஸ்- ராஷ்ட்ரிய ஜனதா தளம் மூத்த நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் தோல்விக்கு காரணம் கூறி, பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.


மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் அவர் சட்டசபை உறுப்பினராக தேர்வாகவில்லை.

இதனால் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் நடந்த சிந்த்வாரா சட்டசபை தொகுதியில் இவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜவின் விவேக் பன்டி சாஹு போட்டியிட்டார்.   வாக்கு எண்ணிக்கையில், சாஹுவை 25,837 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்நாத் தோற்கடித்தார்.

ஆனால், மக்களவை தேர்தலில் பாஜவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருந்தது.

மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகளில், 28 தொகுதிகளை பாஜ கைப்பற்றியது.

போபால் தொகுதியில் போட்டியிட்ட மலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட பாஜ வேட்பாளர் பிரக்யா தாக்கூர் வெற்றிப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் வேட்பாளருமான திக்விஜய் சிங் தோற்றார்.

சட்டசபை தேர்தல் முடிந்து சில மாதங்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததால், அம்மாநில முதல்வர் கமல்நாத், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தாம் ராஜினாமா செய்வதாக கட்சி தலைமையிடம் கடிதம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

.

மூலக்கதை