ஒரே பெயரில் வேட்பாளர்கள்; தெளிவாக ஓட்டளித்த மக்கள்

தினமலர்  தினமலர்
ஒரே பெயரில் வேட்பாளர்கள்; தெளிவாக ஓட்டளித்த மக்கள்

சென்னை : ஒரே பெயரில் பலர் போட்டியிட்டாலும் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதில் மக்கள் ெதளிவாக இருப்பதை இந்த தேர்தல் உணர்த்தி உள்ளது.
பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு எழுத்தறிவு இல்லாதபோது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு எதிராக அதே பெயர் உடைய வேட்பாளர்களை எதிர்க்கட்சிகள் களம் இறக்குவது வழக்கம். அது இந்த தேர்தலிலும் தொடர்ந்தது. லோக்சபா தொகுதிகளில் அ.தி.மு.க. - தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு போட்டியாக அதே பெயரிலான வேட்பாளர்களை சுயேச்சையாக களம் இறக்கினர். தி.மு.க. - அ.தி.மு.க. இரு தரப்பிலும் இது செய்யப்பட்டது. இருப்பினும் அ.ம. மு.க. வேட்பாளர்கள் பெயரில் கூடுதல் ஆட்கள் நிறுத்தப்பட்டனர். இதனால் தங்களின் வெற்றி வாய்ப்பு பறிபோகும் என அ.ம.மு.க.வினர் புலம்பினர்.

ஆனால் மக்கள் யாருக்கு ஓட்டளிக்க விரும்பினரோ அவர்களுக்கு சரியாக ஒட்டளித்துள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. அரக்கோணம் தொகுதியில் பா.ம.க. சார்பில் ஏ.கே.மூர்த்தி போட்டியிட்டார். அவர் 3.43 லட்சம் ஓட்டுகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட மூர்த்தி 3499 ஓட்டுகளை பெற்றுள்ளார். காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் 3.97 லட்சம் ஓட்டுகள் பெற்ற நிலையில் சுயேச்சையாக போட்டியிட்ட மரகதம் 1,640 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். கோவையில் பா.ஜ. வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 3.92 லட்சம் ஓட்டுகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட இரண்டு ராதாகிருஷ்ணன்கள் முறையே 2633; 1627 ஓட்டுகள் பெற்றனர். அதே தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நடராஜன் 5.71 லட்சம் ஓட்டுகள் பெற்றார்;அதே பெயரிலான சுயேச்சை நடராஜன் 1,370 ஓட்டுகள் பெற்றார். ஈரோடு ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி 5.63 லட்சம் ஓட்டுகளும், சுயேச்சை கணேசமூர்த்தி 1,539 ஓட்டுகளும் பெற்றனர்.தென்காசி தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் பொன்னுத்தாய் 92 ஆயிரத்து 216 ஓட்டுகள் பெற்றார். அதே பெயரிலான மூன்று பொன்னுத்தாய்கள் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். அவர்கள் முறையே 4733, 2427, 1129 ஓட்டுகளை பெற்றனர். திருவண்ணாமலையில் தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை 6.66 லட்சம் ஓட்டுகள் பெற்றார். அதே தொகுதியில் அண்ணாதுரை பெயர் கொண்ட மூவர் சுயேச்சைகளாக களம் இறங்கினர்.

அவர்கள் முறையே 1206 937 848 ஓட்டுகளை மட்டும் பெற்றனர். அதே தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 3.62 லட்சம் ஓட்டுகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி 4175 ஓட்டுகளை பெற்றார். திருவாரூர் சட்டசபை இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர் காமராஜ் 19 ஆயிரத்து 133 ஓட்டுகள் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட காமராஜ் பெயரை கொண்ட இருவர் முறையே 206, 110 ஓட்டுகளை பெற்றனர்.இவ்வாறு அனைத்து தொகுதிகளிலும் முக்கிய வேட்பாளர்கள் அதிக ஓட்டுகளைப் பெற அவர்கள் பெயரில் சுயேச்சையாக களம் இறங்கிய வேட்பாளர்கள் மிகக் குறைந்த ஓட்டுகளையே பெற்றனர்.

ஒரே பெயரில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் மக்கள் தாங்கள் ஓட்டளிக்க விரும்பும் நபருக்கு சரியாக ஓட்டளிக்கின்றனர் என்பது இதன் வாயிலாக நிரூபணமாகி உள்ளது.

மூலக்கதை