‘மக்களவை தேர்தலில் காங்கிரசை ஒழிப்பேன்’ பேரவையில் செய்த சபதத்தை நிறைவேற்றிய எடியூரப்பா

தினகரன்  தினகரன்
‘மக்களவை தேர்தலில் காங்கிரசை ஒழிப்பேன்’ பேரவையில் செய்த சபதத்தை நிறைவேற்றிய எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்தாண்டு நடந்த பொது தேர்தலில் 224 தொகுதியில்  பாஜ 104 தொகுதியிலும், காங்கிரஸ் 80, மஜத 37,  பிஎஸ்பி 1 மற்றும் சுயேச்சைகள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். 114 உறுப்பினர்கள்  பலமிருக்கும்  கட்சி மட்டுமே தனித்து ஆட்சி அமைக்க முடியும்.  ஆனால் தேர்தல் முடிவு எந்த  கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் பாஜ சட்டப்பேரவை  கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடியூரப்பா, ஆளுநரை சந்தித்து தங்கள்  கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கும்படி  உரிமை கோரினார். இதனிடையில் 80  தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் வெற்றி  பெற்றிருந்த மஜத தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பதாக அறிவித்தது. அதை  தொடர்ந்து இரு கட்சி  தலைவர்களும் ஆளுநர் வி.ஆர்.வாலாவை சந்தித்து தங்கள்  கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கடிதம் கொடுத்தனர்.அதிகம்  உறுப்பினர்கள் கொண்ட கட்சி என்பதால் பாஜ சட்டப்பேரவை கட்சித் தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்ட எடியூரப்பாவை பதவியேற்க வரும்படி ஆளுநர் வி.ஆர்.வாலா  அழைப்பு விடுத்தார். அதை தொடர்ந்து மே 17ம் தேதி முதல்வராக   பி.எஸ்.எடியூரப்பா பதவியேற்றார். 10 நாளில் பேரவையில் நம்பிக்கை  வாக்கெடுப்பு நடத்தி பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு  ஆளுநர் உத்தரவிட்டார். பலத்தை நிரூபிக்க முடியாத நிலையில் நம்பிக்கை உரிமை கோரும்  விவாதத்தின் மீது எடியூரப்பா பேசும்போது, வரும் மக்களவை  தேர்தலில் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை அடையாளம் இல்லாமல் அழிப்பேன்  என்று சபதம் செய்து தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு  நடத்தாமல் ஆளுநரை சந்தித்து  ராஜினாமா கடிதம் கொடுத்தார். அதை நிறைவேற்றும் வகையில் மக்களவை தேர்தலில் காங்கிரசை  படுதோல்வி அடைய செய்ததின் மூலம் தனது சபதத்தை எடியூரப்பா  நிறைவேற்றியுள்ளார். தற்போது இந்த தகவல்  சமூகவலைத்தளங்களிலும் வைரலாக  பரவிவருகிறது.

மூலக்கதை