நவம்பருக்கு பிறகு முதல் முறையாக கிடுகிடுவென உயர்ந்த விமான பெட்ரோல்

தினகரன்  தினகரன்
நவம்பருக்கு பிறகு முதல் முறையாக கிடுகிடுவென உயர்ந்த விமான பெட்ரோல்

புதுடெல்லி: கடந்த ஆண்டு நவம்பருக்கு பிறகு கடந்த மாதத்தில் விமான பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது என சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு (ஐஏடிஏ) தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் விமான பெட்ரோல் விலை அதிகரித்தது. இதனால் விமான நிறுவனங்களின் இயக்கச்செலவு அதிகரித்து, கட்டண உயர்வுக்கு வழி வகுத்தது. ஜெட் ஏர்வேஸ் கடன் சுமையில் இருந்து மீள முடியாமல் போனதற்கு பெட்ரோல் விலை உயர்வும் ஒரு காரணமாக அமைந்தது. இந்நிலையில், விமான பெட்ரோல் விலை கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகமாக உயர்ந்ததாக சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், ஈரான் மீது அமெரிக்கா விதித்த தடையை அடைத்து மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. பின்னர் டிசம்பர் மாதத்தில் கச்சா எண்ணெய் சராசரி விலை பேரல் 69 முதல் 70 டாலராக இருந்தது. பின்னர் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஆனால் ஈரான் மீதான தடையில் சில நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த தடை கடந்த 2ம் தேதியுடன் முடிந்தது. இதனால் ஏப்ரல் மாதத்தில் விமான எரிபொருளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் விலை சராசரியாக பேரல் 85 என இருந்தது. இதனால் விமான பெட்ரோல் விலை நவம்பருக்கு பிறகு உச்சத்தை எட்டியது என தெரிவித்துள்ளது.

மூலக்கதை