எழுமின் மலேசிய மாநாட்டில் மலேசியா- இந்தியா இடையே 100 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
எழுமின் மலேசிய மாநாட்டில் மலேசியா இந்தியா இடையே 100 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின!

எழுமின் மலேசிய மாநாட்டில் மலேசியா- இந்தியா இடையே 100 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

எழுமினெ மலேசியா-- உலகத் தமிழ் முனைவோர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மே 3,4,5 ஆகிய தேதிகளில் சைபர் ஜெயா மெடிகல் யுனிவர்சிட்டி ஆப் மெடிகல் சயின்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.

மாநாட்டை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டான்ஸ்ரீ டத்தோ பாலன் தொடங்கி வைத்தார். மாநாட்டுத் தலைவரும், டிரா மலேசிய அமைப்பின் நிறுவனருமான சரவணன் சின்னப்பன் வரவேற்றுப் பேசினார்.

எழுமின் அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பார் மாநாட்டு நோக்கங்கள் குறித்துப் பேசினார்.
மாநாட்டில் மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும், தொழில் அதிபர்களும் கலந்து கொண்டனர். வீட்டுக்கொரு தொழில் முனைவோரை உருவாக்குவது என்பது மாநாட்டின் லட்சியம் ஆகும்.

22 நாடுகளைச் சேர்ந்த 370 க்கும் மேற்பட்ட தமிழ் தொழில் அதிபர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். தொழிலில் சிகரம் தொட்டவர்கள் மட்டுமின்றி ஆர்வமுள்ள இளைய தலைமுறையினரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

துறை வாரியாக அரங்கங்கள் அமைக்கப்பட்டு, வல்லுனர்களால் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. பெண் தொழில் முனைவோர் களுக்காக பிரத்தியேக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அழகுத்துறையில் வெற்றிகள் ஈட்டிய வித்யா விஷ்வேந்திரா மற்றும் தமிழ்ச் சங்கத் தலைவர் விஜி ஜெகதீசன் உரை நிகழ்த்தினர்.

இந்தியாவில் இருந்து மோகன் குமாரமங்கலம், பி.டி.ஆர். தியாகராஜன்,  மலேசியாவின் டத்தோ டாக்டர் ஏ.டி. குமாரராஜா ஆகியோர் பேசினர். இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமான மாஃபா நிறுவனத்தின் இயக்குனர் லதா பாண்டியராஜன், சித்த மருத்துவர் சிவராமன், உளவியல் வல்லுனர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பேசினர்.

இரண்டாம் நாள் இரவு விருந்தில் பங்கேற்ற அந்நாட்டு அமைச்சர் சிவராசா முக்கியப் பிரமுகர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

மூன்றாம் நாள் நிறைவு விழாவில் அமைச்சர் எம். குலசேகரன் கலந்து கொண்டு இருநாட்டு ஒருமைப்பாடு குறித்துப் பேசினார். மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் தொடர்புகள் விரிவடைந்தன. ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்ட தொழில் வாய்ப்புகளை மேடையிலேயே அறிவித்தனர்.
100 க்கும் மேற்பட்ட புதிய தொழில் வாய்ப்புகள் தொடங்கப்பட்டு அவர்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

இறுதியில் உலக அளவில் தமிழர்களுக்கான வங்கி ஓன்றை உருவாக்கவும், வீட்டிற்கொரு தொழில் முனைவோரை உருவாக்கவும் எழுமின் அமைப்பு தொடர்ந்து செயல்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. நிறைவு நாளில் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட தமிழர் திருநாள் நிகழ்வு வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது.

எழுமின் மலேசிய மாநாடு, வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது ஆகும்.

மூலக்கதை