இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் சரியான தேர்வு: சந்தேஷ் ஜின்கன் மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் சரியான தேர்வு: சந்தேஷ் ஜின்கன் மகிழ்ச்சி

சண்டிகர்: ‘இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் சரியான தேர்வு. அனுபவம் வாய்ந்த அவரிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்வோம்‘ என்று இந்திய கால்பந்து வீரர் சந்தேஷ் ஜின்கன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த இங்கிலாந்து கால்பந்து வீரர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன், கடந்த ஜனவரியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து குரோஷியாவின் முன்னாள் கால்பந்து வீரர் இகோர் ஸ்டிமாக், தற்போது இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை இந்திய கால்பந்து கூட்டமைப்பு நேற்று வெளியிட்டது. 51 வயதான குரோஷியாவை சேர்ந்த இகோர் ஸ்டிமாக், சர்வதேச கால்பந்து அரங்கில் பயிற்சியாளராக 18 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார்.

1998ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் குரோஷிய அணியில் இடம் பெற்று இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக குரோஷிய அணியின் கால்பந்து பயிற்சியாளராக இவர் 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.

2014ம் ஆண்டு ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு குரோஷிய அணி தகுதி பெற்றதற்கு இவரது பயிற்சியும் முக்கிய காரணம் என்று அப்போது பாராட்டப்பட்டார். இகோர் ஸ்டிமாக் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதை இந்திய கால்பந்து அணியின் முன்னாள், இந்நாள் வீரர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்திய கால்பந்து அணியின் தற்போதைய மிட் ஃபீல்டர் சண்டிகரை சேர்ந்த சந்தேஷ் ஜின்கன் கூறுகையில், ‘‘பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் சரியான தேர்வு. அனுபவம் வாய்ந்த அவரிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்வோம்.

குறிப்பாக அவர் வெற்றிகரமான மிட் ஃபீல்டர் என்பதால், அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள எனக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும்.

அடுத்த மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய கால்பந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்டிமாக்கின் பயிற்சி நிச்சயம் உதவியாக இருக்கும்’’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கிங்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் ஜூன் 5ம் தேதி தாய்லாந்தின் பரிராம் நகரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த குராகோவ் அணியை எதிர்த்து மோதவுள்ளது. இந்திய கால்பந்து அணி கடைசியாக கடந்த 1977ம் ஆண்டு கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் பங்கேற்றது.

கிட்டத்தட்ட 40 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர், இந்த ஆண்டுதான் கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் இந்திய அணி ஆடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை