அயர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம் அபு ஜாயித் 5 விக்கெட் வீழ்த்தி அபாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அயர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம் அபு ஜாயித் 5 விக்கெட் வீழ்த்தி அபாரம்

டப்ளின்: டப்ளினில் நேற்று நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணியை, வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வங்க தேச அணியின் இளம் வீரர் அபு ஜாயித், அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகனாக தேர்வானார்.

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்க தேச அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடநது வருகிறது.   நேற்று நடந்த போட்டியில் அயர்லாந்து-வங்க தேச அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்தது.

ஓபனர் பால் ஸ்டிர்லிங் அபாரமாக ஆடி 141 பந்துகளில் 130 ரன்கள்(8 பவண்டரி, 4 சிக்சர்) குவித்தார். கேப்டன் வில்லியம் போர்ட்டர் பீல்ட் 94 ரன்கள் எடுத்தார்.

வங்கதேச அணியின் இளம் வீரர் அபு ஜாயித் 9 ஓவர்களில் 58 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது அவரது 2வது சர்வதேச ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இவரே இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களின் சிறப்பான ஆட்டத்தினால் 293 என்ற இலக்கை, 43 ஓவர்களில் எட்டி, 6  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்க தேச அணி இப்போட்டியில் அதிரடியாக வெற்றி பெற்றது. ஓபனர்கள் தமிம் இக்பால் 57 ரன், லித்தன் தாஸ் 76 ரன் எடுத்து நல்ல துவக்கத்தை அளித்தனர்.

இருவரும் முதலாவது விக்கெட்டுக்கு 117 ரன் எடுத்தனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சாஹிப் ஹல் ஹசன் 50 ரன், முஷிப்பிகர் ரஹிம் 35 ரன், மமுதுல்லா 35 ரன் எடுத்தனர்.

அயர்லாந்து தரப்பில் பாய்ட் ரான்கின் 7 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

இத்தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.

இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்த்து, வங்கதேச அணி ஆடவுள்ளது. சுருக்கமான ஸ்கோர் அயர்லாந்து - 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் (பால் ஸ்டிர்லிங் 130 ரன், வில்லியம் போர்ட்டர் பீல்ட் 94 ரன், அபு ஜாயித் 5/58).

வங்கதேசம் - 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள்(தமிம் இக்பால் 57 ரன், லித்தன் தாஸ் 76 ரன், சாஹிப் ஹல் ஹசன் 50 ரன், முஷ்பிகர் ரஹிம் 35 ரன், மஹ்மதுல்லா 35 ரன், பாய்ட் ரான்கின் 2/48).

.

மூலக்கதை