இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு

இரு பிரிவினர் வன்முறை சம்பவத்தில் ஒருவர் பலி
மீண்டும் கறுப்பு ஜூலையா?: ராஜபக்சே அச்சம்
    
கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒருவர் பலியான நிலையில், மீண்டும் கறுப்பு ஜூலை வேண்டாம் என்று ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதில், 260க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த கொடூர தாக்குதலை ஒரு பெண் உள்பட 9 தீவிரவாதிகள் நடத்தியதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், இலங்கை அரசானது உள்ளூரைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை குற்றம் சாட்டியது.

தொடர்ந்து, அந்த அமைப்பை தடை செய்து, இச்சம்பவம் ெதாடர்பாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில், நாட்டின் பல பகுதிகளில் இரு பிரிவினர் இடையே ஒருவித பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து அந்நாட்டின் கடலோர நகரமான சிலாபம் நகரில் நேற்று முன்தினம் இருதரப்பினருக்கு இடையில் கலவரம் வெடித்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேவையற்ற வதந்திகள் பரவாமல் இருக்க பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இன்று, இலங்கையில் டுவிட்டர் இணையதளம் முதன்முறையாக முடக்கப்பட்டது. பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீசார் அறிவித்தனர்.நாடு முழுவதும் நேற்று இரவு 9 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும், வட மேற்கு மாகாண பகுதியில் உள்ள குலியபிட்டியா, பின்ஜிரியா, தும்மலசூரியா மற்றும் ஹெட்டிபோலா ஆகிய நான்கு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்ட நிலையிலும், அப்பகுதிகளில் பள்ளிகள் இன்று திறக்கப்படவில்லை.

தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால், ராணுவம் மற்றும் போலீசார் தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.
இருந்தும், மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு சொந்த கடைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பலியானார்.

20க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இலங்கையின் கினியமா, குயிலிபிட்டிய, ஹெட்டிபோல போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல் புகைப்படங்களை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பதற்றமான நிலையே நீடிப்பதால், ராணுவம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே, இலங்கை போலீசார் தரப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த ஈஸ்டர் தின குண்டுெவடிப்பு சம்பவத்தில் ெதாடர்புடைய 4 தீவிரவாதிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இவர்கள் குறித்த விபரத்தையும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மேற்கண்ட 4 தீவிரவாதிகள் குறித்த விபரங்கள் தெரிந்தால், உடனடியாக தெரிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில், “வதந்திகளை நம்ப வேண்டாம், பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ராஜபக்சே கூறுகையில், ‘‘1983ம் ஆண்டு ஏற்பட்ட கறுப்பு ஜூலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாம் (1983 ஜூலை 23ம் தேதி நள்ளிரவு ராணுவத்தினர் பயணம் செய்த வாகனங்களின் மீது நடந்த தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக இருபிரிவினர் இடையே நடந்த வன்முறை தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்). இந்த நேரத்தில் பொறுமையுடன் சிந்தித்தும் செயற்பட வேண்டும்.

தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, நாடு மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

.

மூலக்கதை