கோளாறான விமானம் தரை இறங்கிய போது விபத்து ரஷ்யாவில் 41 பேர் கருகி பலி: அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோளாறான விமானம் தரை இறங்கிய போது விபத்து ரஷ்யாவில் 41 பேர் கருகி பலி: அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல்

மாஸ்கோ: ரஷ்யாவில் கோளாறான விமானம் தரை இறங்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், 41 பேர் கருகி பலியாகினர். விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடக்கும் நிலையில், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.   ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து முர் மாஸ்கான் என்ற இடத்திற்கு, இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு சூப்பர் ஜெட் - 100 என்ற விமானம் புறப்பட்டது.

இந்த விமானத்தில் 73 பயணிகள், 5 விமான பணியாளர்கள் என மொத்தம் 78 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக விமானநிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு தரையிறங்க அனுமதி பெறப்பட்டது.

தொடர்ந்து விமானம் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென விமானம் தீப் பிடித்து எரிந்தது.   விமானத்தில் பயணம் செய்தவர்களில் 37 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

41 பேர் கருகி பலியாகினர். பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விபத்தின் போது விமானம் தீ பிடித்து கரும்புகைகள் வெளியேறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. விபத்தையடுத்து, மாஸ்கோவுக்கு வரும் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

விமான விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

.

மூலக்கதை