தொடர் குண்டுவெடிப்பு நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் 2 தீவிரவாத இயக்கத்துக்கு தடை: இலங்கை அதிபர் சிறிசேனா அதிரடி அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தொடர் குண்டுவெடிப்பு நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் 2 தீவிரவாத இயக்கத்துக்கு தடை: இலங்கை அதிபர் சிறிசேனா அதிரடி அறிவிப்பு

ெகாழும்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்து ஒரு வாரம் ஆன நிலையில், 2 தீவிரவாத இயக்கங்களுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா தடை விதித்துள்ளார். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு நடந்த சம்பவத்தில் 17 போலீஸ்காரர்கள் பலியானதாக ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.


கடந்த 21ம் தேதி  இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. தேவாலயங்களில் ஈஸ்டர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 36 வெளிநாட்டினர் உட்பட 253 பேர் பலியாயினர்.

500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பின்னணியில் இலங்கையைச் சேர்ந்த, ‘தேசிய தவ்ஹீத் ஜமாத்’ என்ற அமைப்பினர், இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தி உள்ளனர்.

இதில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவன் ஜஹ்ரான் ஹாசிம், ஓட்டலில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியாகி விட்டான்.

நாடு முழுவதும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை கைது செய்யும் வகையில், நாடு முழுவதும் ராணுவமும், போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு நடப்பத்தப்பட்ட வேட்டையில், கல்முனை மாவட்டம், சாய்ந்தமருது என்ற பகுதியில் இருந்த ஒரு வீட்டை சோதனை செய்ய முயன்ற போது, வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். வீட்டில் வெடிகுண்டுடன் பதுங்கியிருந்த அவர்கள், 3 முறை வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

சிறிது நேரம் கழித்து, 6 ஆண்கள், 3 பெண்கள், 6 குழந்தைகள் என மொத்தம் 15 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன.
இவர்களில் 9 பேர் தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வீட்டில் நடத்தப்பட்ட ேசாதனையில் டி56 ரக துப்பாக்கி, குவியல் குவியலாக வெடிகுண்டுகள், தற்கொலை தாக்குதலுக்கு தேவையான பொருட்கள், ராணுவ சீருடைகள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடி ஆகியவை கைப்பற்றப்பட்டன. இச்சம்பவத்தை தொடர்ந்து, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கல்முனை, சவலக்காடே, சம்மன்துறை ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொது இடங்கள், பள்ளிகள், ஓட்டல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், நாடு முழுவதும் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

இதனிடையே, இலங்கை பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்தில், ‘இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஓயும்வரை, தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையைத் தொடர வேண்டும்’ என்று முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, ‘ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் தீவிரவாத குழுக்களை ஒழிப்பதற்கு புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டியுள்ளது’ என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, இலங்கை ஜனாதிபதி என்ற வகையில் 2019ம் ஆண்டின் 1ம் இலக்க அவசர கால (சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) கட்டளையின் கீழ் உள்ள அதிகாரங்களின்படி, ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனா, ‘உள்ளூர் தீவிரவாத இயக்கங்களான தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் (National Thawheed Jammath) மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி (Jamathei Millathu Ibraheem zeilani) ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களாக அறிவிக்கப்படுகிறது’ என்று அறிவித்தார்.
 
அதையடுத்து, ‘மேற்கண்ட இரு இயக்கங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், நாட்டில் செயல்பட்டுவரும் மற்ற இனவாத அமைப்புக்களின் செயல்பாடுகளும் அவசர சட்டத்தின் கீழ் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஜனாதிபதி மாளிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 9 தீவிரவாதிகள் உட்பட 15 பலியான சம்பவத்தில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த 17 போலீஸ்காரர்கள் பலி அல்லது படுகாயமடைந்ததாக, ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இன்று அதிகாலை அறிவித்தது. மேலும், நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினர் நடத்தப்பட்ட மோதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த தகவலை ராய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இருந்தும், 17 போலீஸ்காரர்கள் பலியானது ெதாடர்பான ஆதாரங்களை ஐஎஸ் அமைப்பு வெளியிடவில்லை என்று, அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகும் நிலையில், இன்று நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.


.

மூலக்கதை