குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு.... இலங்கை முழுவதும் துக்கதினம் அனுசரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு.... இலங்கை முழுவதும் துக்கதினம் அனுசரிப்பு

* பயணிகளுக்கு அமெரிக்கா, கனடா எச்சரிக்கை

கொழும்பு : இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 310 ஆக அதிகரித்த நிலையில், இலங்கை முழுவதும் இன்று துக்கதினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் தங்களது பயணிகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளன.

குண்டு ெவடிப்பு சம்பவத்தில், அதிபர், பிரதமர் இடையே ஏற்பட்ட மோதலால் உளவு தகவல் புறக்கணிக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடந்த 21ம் ேததி ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின் போது இலங்கை தலைநகர் கொழும்புவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

அப்போது, அங்குள்ள 4 தேவாலயங்கள் மற்றும் 3 ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 35 வெளிநாட்டினர் உட்பட இதுவரை 310 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
உலகையே உலுக்கியுள்ள இந்த கொடூர சம்வத்தில் இருந்து மக்கள் மீளாத நிலையில், கொழும்புவில் நேற்று 9வது இடத்தில் குண்டு வெடித்தது.

கொச்சிக்கடை கந்தனை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனில் இருந்து வெடிகுண்டை, செயலிழக்கச்செய்யும் போது எதிர்பாராதவிமாக வெடித்துள்ளது. இருந்தும், அதில் யாருக்கும் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருந்த போதும், மக்கள் அச்சத்துடனும், பீதியில் இருந்து மீளமுடியாத நிலையில் உள்ளனர். மேலும், போலீசார் மேற்கொண்ட சோதனையில் விமான நிலையம் அருகே பைப் வெடிகுண்டு ஒன்றும், கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்களும் கண்டெடுக்கப்பட்டன.

இலங்கையில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பே காரணம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ரஜிதா செனரத்னே குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், வெளிநாட்டு அமைப்பின் சதிவேலை இருப்பதாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ‘உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் அரசு ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கொழும்பு பேராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை தேசிய தவுஹீத் ஜாமாத் அமைப்பைச் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்பில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 36 உயிரிழந்ததில், இந்தியாவைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக கர்நாடகாவைச் சேர்ந்த ரமேஷ், ல‌ஷ்மி நாராயண், ரங்கப்பா, ஹனுமந்தராயப்பா ஆகிய 4 பேர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ரசீனா, சென்னையைச் சேர்ந்த 2 பேரும் அடங்கும்.
அதேபோல், வெடிகுண்டு விபத்தில் 3 போலீசாரும் பலியாகி உள்ளனர்.

தற்கொலைப்படையைச் சேர்ந்த 8 பேர், மேற்கண்ட இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரிய மனிதவெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து, இன்று தேசிய துக்கதினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவரில் உள்ள மின்விளக்குகள் நேற்றுமுன்தினம் இரவு அணைக்கப்பட்டிருந்தன.
இலங்கையில் சர்ச் மற்றும் ெபாது இடங்களில் மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, துக்க தினத்தை கடைபிடித்து வருகின்றனர். அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் இலங்கையின் தேசிய கொடியை அரை கம்பத்தில்  பறக்க விட்டு துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், அலுவலக நேர ஆரம்பத்தின் போது, 3 நிமிட மௌன அஞ்சலியையும் செலுத்துமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதற்கிடையில் இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ராணுவம் தீவிர சோதனை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், இலங்கைக்கு செல்லும் தனது நாட்டினருக்கு அமெரிக்கா நேற்று எச்சரிக்கை விடுத்து அறிக்கையில், ‘இலங்கையில் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்தோ அல்லது விடுக்காமலோ மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும். சுற்றுலா தலங்கள், போக்குவரத்து வாகனங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள், ஓட்டல்கள், கிளப்புகள், உணவு விடுதிகள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது.

எனவே, இலங்கைக்கு செல்லும் அமெரிக்கர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது. இதுபோல், கனடா விடுத்த எச்சரிக்கையில், ‘வெளிநாடுகளில் கனடா மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, கனடா அரசு அவ்வப்போது நம்பகமான தகவல்களை அளித்து வருகிறது.

அதற்கேற்ப கனடா நாட்டினர் தங்களது பயண திட்டத்தை வகுத்து கொள்ளலாம். இலங்கைக்கு செல்வது உங்களது விருப்பம்.

வெளிநாடுகளில் உங்களது தனிப்பட்ட பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

புலனாய்வு கடிதத்தின் பின்னணி

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக இந்திய புலனாய்வு தகவல் தெரிவித்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்திய புலனாய்வு எச்சரிக்கையில் ‘என்டிஜே’ அமைப்பின் பெயர் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, ‘தாக்குதல் குறித்து ஏற்கனவே புலனாய்வு தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வந்தது.

ஆனால், அது எனக்கோ அல்லது எனது அமைச்சர்களுக்கோ யாருக்கும் சுட்டிக்காட்டவில்லை’ என்று குறிப்பிட்டார். இருந்தும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இந்திய புலனாய்வு தகவல்களை குறிப்பிடுகிறாரா அல்லது வேறெதும் எச்சரிக்கை வந்ததை குறிப்பிட்டாரா என்று தெளிவாக குறிப்பிடவில்லை.

ஆனால், புலனாய்வு கடிதத்தை டுவிட்டரில் பதிவு செய்திருந்த அமைச்சர் பெர்ணான்டோ, ‘பத்து நாட்களுக்கு முன்பாகவே இது தொடர்பான ஆவணங்கள் கிடைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று விமர்சித்திருந்தார்.

‘பாதுகாப்புத்துறை தற்போது அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்டுப்பாட்டில் இருப்பதால், புலனாய்வு கடிதத்தை ரணில் மற்றும் அவரது அமைச்சர்கள் ரகசியமாக வைத்திருந்தது’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் ரஜிதா செனரத்னே கூறியுள்ளார். கடந்தாண்டு இறுதியில் இருந்தே இலங்கையில் பிரதமருக்கும் அதிபருக்கும் இடையே அரசியல் ரீதியாக மோதல் நடைபெற்று வருகிறது.

இருவருக்கும் சிறந்த உறவு இல்லை. அது நிர்வாக விஷயத்திலும் தொடர்ந்தது.

இருந்தும், அமைச்சர்  செனரத்னவின் கருத்துகளுக்கு அதிபர் சிறிசேனா இன்னும் எதுவும் கருத்து கூறவில்லை. மேலும், ‘உள்ளூர் குழுவின் வேலையாக மட்டும் இத்தாக்குதல்கள் இருக்காது; இதில் சர்வதேச குழுக்களின் தொடர்பு இருக்கிறது’ என்று, அமைச்சர் செனரத்ன மேலும் கூறினார்.

அதிகாரிகளோ அல்லது ஊடகங்களோ என்டிஜே குறித்து குறிப்பாக எதுவும் சொல்லவில்லை. புலனாய்வு  கடித விவகாரம் ஒருபுறம் பிரச்னையை கிளப்பி இருக்க, இலங்கை அரசாங்கத்தினுள்ளும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், இலங்கை அரசியல் நெருக்கடியான நிலையை சந்தித்துள்ளது.

வெல்லம்பட்டி தொழிலாளர்கள்

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையர்களில் 26 பேர்  குற்றப்புலனாய்வுத் துறையாலும், 3 பேர் தீவிரவாத தடுப்புப் பிரிவினாலும், 9  பேர் போலீசாராலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 38 பேர்  போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.   இவர்களில் 9 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 6ம் தேதி  வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த 9 பேரும் வெல்லம்பட்டி என்ற இடத்தில்  உள்ள ஒரே தொழிற்சாலையில் வேலை செய்துவந்தவர்கள் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

.

மூலக்கதை