குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு: 160 தீவிரவாதிகள் ஊடுருவல்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு: 160 தீவிரவாதிகள் ஊடுருவல்?

கொடூர சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவன் படம் வெளியீடு
பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளை மாற்ற அதிபர் சிறிசேனா முடிவு
இலங்கை முழுவதும் அதிரடி வேட்டை


கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரித்த நிலையில், நேற்று மாலை இலங்கை முழுவதும் அதிரடிப்படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இலங்கையில் 160 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த கொடூர சம்பவத்துக்கு மூளையாக ெசயல்பட்டவனின் புகைப்படம் வெளியிடப்பட்ட நிலையில், பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளை மாற்ற முடிவு செய்துள்ளதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.   கடந்த 21ம் தேதி ஈஸ்டர் தினத்தில் இலங்கையின் கொழும்பில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் சிக்கி 359க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இலங்கையை நிலைகுலையச் செய்த இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.மிக கொடூர தாக்குதல் சம்பவத்தை அடுத்து கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு உள்ளன. கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி மற்றும் வேன் ஆகியவை நுழைந்திருப்பதாக புலனாய்வுத் துறைக்குக் கிடைத்த தகவலால் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதனால், கொழும்பு நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் உரிய சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. மேலும், கொழும்பு துறைமுக வாயிலிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.


இந்த நிலையில் நியூசிலாந்தின் கிரைஸ்ட் சர்ச் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக இலங்கை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ரூவன் விஜயவர்த்தனே தெரிவித்தார். நியூசிலாந்தின் கிரைஸ்ட் சர்ச் என்ற நகரில் 2 மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு நேற்று மாலை பொறுப்பேற்றது.

இன்று காலை நிலவரப்படி தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நூற்றுக்கணக்கானோர் கொழும்பு, நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக, ஒரு வாரத்தில் பாதுகாப்பு பிரிவின் தலைவர்களை மாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேனா திட்டமிட்டுள்ளார்.

அதற்கான உத்தரவுகள் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிறிசேனா கூறுகையில், ‘‘கடந்த 1980ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப் பகுதியில் சிங்கள மக்கள், தமிழர்களை சந்தேக கண்ணோட்டத்திலேயே பார்த்தனர்.

அதன் பின் காலப் பகுதியில் தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள் கிடையாது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர். அதேபோன்று, அனைத்து முஸ்லிம் மக்களையும் சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்.

வெளிநாடுகள் தீவிரவாத்திற்கு எதிராக பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்கப்படும்’’ என்றார்.

இலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை மட்டும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 50 பேரை கடந்துள்ளது. தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து, வாக்கி டாக்கி போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள், வாகனங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தற்கொலை படை  தாக்குதலின் பிரதான குற்றவாளி சஹ்ரான் என்பவரின் தலைமையில் இயங்கி வந்த பள்ளிவாசலில் அதிரடிப்படையினர் புகுந்து சோதனை நடத்தியதாக தகவல்கள் வந்துள்ளன.

இதேபோல், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசலிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

ேமலும், நேற்று மாலை 5. 20 மணியளவில் மேற்படி பள்ளிவாசலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் மற்றும் அங்கிருந்த கம்ப்யூட்டர் மற்றும் கேமராக்களை போலீசார் கைப்பற்றினர்.

குறிப்பிட்ட பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவராக சஹ்ரான் ஹாசிமும், அதன் செயலாளராக அவரின் சகோதரர் ஜெய்னி ஹாசிம் என்பவரும் செயல்பட்டு வந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அதில் சஹ்ரான் ஹாசிம்தான் இந்த தற்கொலைப் படைக்கு தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார்.

சின்னமோன் ஓட்டலிலும், சங்கரிலா ஓட்டலிலும் மனித வெடிகுண்டாக புகுந்து தாக்கல் நடத்தியது இரு சகோரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அதில் சஹ்ரான் ஹாசியம் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக, இலங்கையின் பாதுகாப்பு துணை அமைச்சர் ரூவன் விஜயவர்தனே நேற்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், ‘‘இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத்தும், மற்றொரு இஸ்லாமியவாத குழுவான ஜேஎம்சி என்ற அமைப்பும் இணைந்து இத்தாக்குதலை தாக்குதலை நடத்தியிருக்கின்றன’’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

 மேலும் இலங்கையில் தாக்குதல் நடத்த 160 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக இலங்கை நாழிதள் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அவர்களைப் பிடிக்க இலங்கை ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

மேலும், தீவிரவாதிகளுக்கு இலங்கையில் 75 ஏக்கர் கொண்ட தென்னந்தோப்பில் பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும், அந்த நாழிதள் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இது குறித்தும் இலங்கை ராணுவம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

சஹ்ரான் ஹாசிம் யார்? : முன்னதாக 2017ம் ஆண்டில் காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய மதப்  பிரிவினருக்கும், மவுலவி சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத்  ஜமாத்திற்கும் இடையில் நடைபெற்ற மோதலில், சஹ்ரான் தலைமறைவாக இருந்து  வந்தார்.

இந்த நிலையிலேயே, இலங்கையில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத்  தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக சஹ்ரான் செயற்பட்டுள்ளார் தகவல்  வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் செயல்படும் ஐஎஸ் அமைப்புடன்  தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த சிலர், இந்த தாக்குதலை நடத்தியது உறுதி செய்யப்பட்டதால், இலங்கை அரசு தீவிரவாதிகள் குறித்த தொடர்புகளை அறிய  சர்வதேச உதவியை நாடியுள்ளது.மனித வெடிகுண்டுகளின் பெயர்: இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்த நிலையில், தற்கொலைப்படையில் இடம்பெற்றவர்களின் பெயர் பட்டியலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அபு உபயத, அபு அல் முக்தர், அபு கலீல், அபு கம்சா, அபு அல் பாரா, அபு முகமது மற்றும் அபு அப்துல்லா ஆகியோர் தாக்குதலை நடத்தியதாகவும், ஐஎஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்துவதற்கு முன், தீவிரவாதிகள் எடுத்துக் கொண்ட உறுதி மொழியேற்பும் அந்த வீடியோவில் உள்ளது. முன்னதாக தற்கொலைப்படையினர் 7 பேரும் குழுவாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் தாக்குதலுக்கு முன் உறுதி மொழியேற்ற வீடியோ பதிவுகளையும் ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

10வது குண்டு வெடித்தது: கொழும்பு நகரில் 8 இடங்களில் நடந்த வெடிகுண்டு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில், சம்பவம் நடந்த அடுத்த விமான நிலையம் அருகே 6 அடி நீளமுள்ள பைப் வெடிகுண்டை போலீசார் கைப்பற்றினர்.

பின்னர், வெடிகுண்டை செயலிழக்க செய்யும் போது ஏற்பட்ட விபத்தில், அதிர்ஷ்டவசமாக மக்கள் உயிர்தப்பினர். இன்று காலை கொழும்புவில் சவோய் திரையரங்கு அருகில் சந்தேகத்துக்கு இடமான பைக், கார் போன்ற வாகனங்களை சோதனை செய்த போது, பைக்கில் ஒரு வெடிகுண்டு இருந்தது கண்டறியப்பட்டது.

உடனே, வெடிகுண்டை செயலிழக்க செய்யும் நிபுணர்கள் வந்து அந்த குண்டை கைப்பற்றி அப்புறப்படுத்தினர். அப்போது குண்டு வெடித்தது.

அதில் யாருக்கும் காயம் இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, பிரதமர் ரணில், ‘மேலும் சில இடங்களில் குண்டு வெடிப்பு நடக்கலாம்; மக்கள் உஷாராக இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.

தீவிரவாத அமைப்பின் தலைவன் பலி அமைச்சர் தகவல்:

இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூபன், இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தீவிரவாதிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

தீவிரவாதிகளின் புகைப்படத்தை தற்போது வெளியிட முடியாது. இலங்கையில் குண்டு வெடிக்கலாம் என்ற உளவு தகவல் கிடைத்தது உண்மைதான்.

இதுவரை 359 பேர் பலியாகி உள்ளனர். சாங்கிரி ஓட்டல் தாக்குதலில் தீவிரவாத அமைப்பின் தலைவன் பலியானான்.

தற்கொலைப்படையில் இருந்த ஒருவன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் படித்துவிட்டு இலங்கையில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளான். மேலும் ஒரு இடத்தில் வெடிகுண்டு கண்டறியப்பட்டது.

அதனை செயலிழக்க செய்யும் போது, 2 பேர் காயமடைந்தனர். இலங்கையில் செயல்பட்ட தீவிரவாதிகளுக்கு வெளிநாட்டில் இருந்து நிதியுதவி வந்திருக்கலாம்.

தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் படித்த நடுத்தவர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள். சர்வதேச அமைப்புகளின் ெதாடர்பு, இலங்கை தாக்குதலில் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


.

மூலக்கதை