உக்ரைன் அதிபர் தேர்தலில் காமெடி நடிகர் அமோக வெற்றி: அதிபராக நடித்தவர் நிஜ அதிபரானார்

தினகரன்  தினகரன்
உக்ரைன் அதிபர் தேர்தலில் காமெடி நடிகர் அமோக வெற்றி: அதிபராக நடித்தவர் நிஜ அதிபரானார்

கீவ்: உக்ரைன் நாட்டு அதிபர் தேர்தலில்,  அரசியல் அனுபவமே இல்லாத கமெடி நடிகர் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார். உக்ரைன் நாட்டில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் பெட்ரோ போரோஷென்கோ போட்டியிட்டார். இவரை எதிர்த்து காமெடி நடிகர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி(41) என்பவர் போட்டியிட்டார். இவர் ‘மக்கள் சேவகன்’ என்ற டிவி தொடரில் அதிபராக நடித்து பிரபலம் அடைந்தவர்.இந்நிலையில் அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் நடிகர் ஜெனலன்ஸ்கி 73.2 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிப் போரோஜென்கோவுக்கு 24.4 சதவீதம வாக்குகள் மட்டுமே கிடைத்தன. உக்ரைன் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியே காமெடி நடிகர் வெற்றிக்கு காரணம் என கூறப்படுகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் நடந்த போரில் மொத்தம் 13 ஆயிரம் பேர் பலியாயினர். இது தவிர ஊழல், சமூக அநீதி ஆகியவையும் உக்ரைனில் நீடித்தது. இதனால் வெறுப்படைந்த மக்கள், ஒரு மாற்றத்துக்காக காமெடி நடிகருக்கு வாக்களித்து அதிபராக தேர்வு செய்துள்ளனர். இந்த வெற்றிக்குப்பின் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஜெலன்ஸ்கி, ‘உங்களை ஒருபோதும் கைவிட மாட்டேன். எங்களை பாருங்கள். எல்லாமே சாத்தியம் என சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளிடம் என்னால் கூற முடியும். உக்ரைன் பிரச்னைகளுக்கு தீர்வு காண, மேற்கத்திய நாடுகளின் முயற்சியில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க விரும்புகிறேன்’’ என்றார். இவர் வழக்கமான தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை. காமெடி மீம்ஸ்கள் மூலம் சமூக இணையதளங்களில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெற்றி பெற்றுள்ளார். இவரது ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘புதிய முகத்தால் மட்டுமே உக்ரைன் அரசியலை சுத்தப்படுத்தி, பிரிவினைவாதிகளுடனான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முடியும்’’ என்றனர். ஜெலன்ஸ்கிக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிகிறது.

மூலக்கதை