தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி...... இன்று அவசரமாக கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

தினகரன்  தினகரன்
தொடர் குண்டு வெடிப்பு எதிரொலி...... இன்று அவசரமாக கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

கொழும்பு: இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் உலகையே உலுக்கியுள்ள நிலையில், இன்று அந்நாட்டு நாடாளுமன்றம் அவசரமாக கூடுகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடந்து கொண்டிருந்தபோது, தேவாலயங்கள்,  நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்புகளால் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் உடல் சிதறி பலி ஆனார்கள். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கொழும்பு நகரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நாட்டை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பற்றி ஆலோசிக்க அதிபர் சிறிசேனா தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல் அவசரநிலை அமலுக்கு வந்தது. இந்த சூழலில், இலங்கை நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது. குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் பேச உள்ளனர். 

மூலக்கதை