3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்

தினகரன்  தினகரன்
3 ஸ்டாண்டுகளை திறக்க அனுமதி இல்லை: ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்

சென்னை: ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன், மார்ச் 23ம் தேதி சென்னையில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2-வது இடம் பெற்றது. இதனால் நடப்பு சாம்பியன் அணிக்கு சொந்தமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் இறுதிப் போட்டி நடத்தப்படுவதாக இருந்தது. இந்நிலையில், ஐ, ஜே, கே ஆகிய 3 ஸ்டாண்டுகளை திறக்க தேவைப்படும் அனுமதியைப் பெறவில்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளதால் ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் நியமித்த பிசிசிஐ நிர்வாகக் கமிட்டியின் விநோத் ராய் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். நாக் அவுட் போட்டிகளின் கேட் டிக்கெட் விற்பனைகள் பிசிசிஐ விருப்பத் தெரிவாகும். அதனால் நாங்கள் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ‘பிளே-ஆப்ஸ’ போட்டிகள் சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் மே 8 மற்றும் மே 10ம் தேதிகளில் நடைபெறும் என்று நிர்வாகக் கமிட்டி கூறியுள்ளது.சென்னை சேப்பாக்க மைதானத்தின் 3 ஸ்டாண்டுகளைச் சேர்த்தால் 12,000 த்திற்கும் அதிகமான டிக்கெட் விற்பனையாகும். ஆனால் அங்கு அனுமதி இல்லை என்றால் அந்த கேட் கலெக்‌ஷன் இல்லாமல் போகும் என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. அனைத்து நாக் அவுட் போட்டிகளின் கேட் கலெக்‌ஷனும், டிக்கெட் விற்பனையும் பிசிசிஐ-அதிகாரத்தின் கீழ் வருகிறது என்றால் ஏன் குவாலிஃபையர் 1 போட்டி சென்னையில் அனுமதிக்கப்பட்டது என்று கேட்டதற்கு விநோத் ராய், சென்னை அணி கடந்த முறை சாம்பியன் என்பதால் குவாலிஃபயர் 1 மற்றும் இறுதிப் போட்டி சென்னைக்கு வழங்கப்பட்டது. இப்போது அவர்கள் டாப் 2 அணிக்குள் வரும்போது நாம் அனைத்துப் போட்டிகளையும் அங்கிருந்து அகற்ற முடியாது. ஒரேயொரு நாக் அவுட் போட்டி அவர்களுக்கு அங்கு வழங்குவது முறையானதுதான் என்றார். ஹைதராபாத்தில் மே 6,8, 10ம் தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளதால் 12-ம் தேதி ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது என்றார். 2012 முதல் இந்த 3 ஸ்டாண்ட்கள் மூடியே உள்ளன. ஒரேயொரு இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் விதிவிலக்காக டிக்கெட் இந்த ஸ்டாண்டுகளில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை