எழுச்சி பெறுமா சென்னை கிங்ஸ் | ஏப்ரல் 22, 2019

தினமலர்  தினமலர்
எழுச்சி பெறுமா சென்னை கிங்ஸ் | ஏப்ரல் 22, 2019

சென்னை: பிரிமியர் தொடரில் இன்று சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினால், ‘ஹாட்ரிக்’ தோல்வியை தவிர்த்து வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.

இந்தியாவில், 12வது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் மும்பை, கோல்கட்டா, பஞ்சாப் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணி, ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

சென்னை அணி, இதுவரை விளையாடிய 10 போட்டியில், 7 வெற்றி, 3 தோல்வியை பெற்றது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான இடத்தை உறுதி செய்யலாம். ஆனால் கடைசியாக விளையாடிய 2 போட்டியில் ஐதராபாத், பெங்களூரு அணிகளிடம் தோல்வியடைந்தது. இதில் பெங்களூரு அணிக்கு எதிராக கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

தோனி நம்பிக்கை: சென்னை அணியின் ‘டாப்–ஆர்டரில்’ ஷேன் வாட்சன் (147 ரன்), அம்பதி ராயுடு (192), ரெய்னா (207) பெரிய அளவில் சோபிக்காதது ஏமாற்றம். இது, பின்வரிசையில் களமிறங்கும் கேப்டன் தோனிக்கு (314 ரன்) நெருக்கடியாக அமைகிறது. டுபிளசி (178 ரன், 6 போட்டி) ஓரளவு கைகொடுக்கிறார். ‘ஆல்–ரவுண்டர்களான’ ரவிந்திர ஜடேஜா (76 ரன், 10 போட்டி), டுவைன் பிராவோ (44 ரன், 5 போட்டி) அதிரடி காட்டினால் நல்ல ஸ்கோரை பெறலாம்.

வேகப்பந்துவீச்சில் தீபக் சகார் (13 விக்கெட்) நம்பிக்கை அளிக்கிறார். இவருக்கு ஷர்துல் தாகூர் (6 விக்.,) ஒத்துழைப்பு தந்தால் நல்லது. ‘சுழலில்’ அசத்தி வரும் இம்ரான் தாகிர் (16 விக்.,), ரவிந்திர ஜடேஜா (9), ஹர்பஜன் (7) கூட்டணி மீண்டும் சாதிக்கலாம்.

சொந்த மண்ணில், உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சென்னை அணியினர் எழுச்சி காணும் பட்சத்தில், ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுத்து வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.

வார்னர் அபாரம்: ஐதராபாத் அணி, இதுவரை விளையாடிய 9 போட்டியில், 5 வெற்றி, 4 தோல்வி என, 10 புள்ளிகளுடன் உள்ளது. கடைசியாக விளையாடிய 2 போட்டிகளில் சென்னை, கோல்கட்டா அணிகளை வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது.

‘டாப்–ஆர்டரில்’ டேவிட் வார்னர் (517 ரன்), ஜானி பேர்ஸ்டோவ் (445) ஜோடி சிறப்பான துவக்கம் அளித்து வருவது பலம். ஆனால் ‘மிடில்–ஆர்டரில்’ விஜய் சங்கர் (139 ரன்), யூசுப் பதான் (32), தீபக் ஹூடா (60), மணிஷ் பாண்டே (54), கேப்டன் வில்லியம்சன் (28) சொல்லிக் கொள்ளும்படி விளையாடாதது பின்னடைவு.

வேகப்பந்துவீச்சில் சந்தீப் சர்மா (9 விக்கெட்), கலீல் அகமது (9), புவனேஷ்வர் குமார் (7), சித்தார்த் கவுல் (6) ஓரளவு கைகொடுக்கின்றனர். ‘ஆல்–ரவுண்டர்’ விஜய் சங்கர் விக்கெட் வீழ்த்தினால் நல்லது. ‘சுழலில்’ ரஷித் கான் (9 விக்.,) நம்பிக்கை அளிக்கிறார்.

மூலக்கதை