குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்

தினகரன்  தினகரன்
குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது இலங்கையில் அவசரநிலை பிரகடனம்: அதிரடி நடவடிக்கை எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம்

* விமானநிலையம், பஸ் ஸ்டாண்டில் மேலும் குண்டுகள் கண்டுபிடிப்புகொழும்பு: இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தின் பதற்றம் தணிவதற்குள் நேற்று மதியம் 9வது குண்டு வெடித்தது. விமான நிலையம், பஸ் நிலையம் அருகே மேலும் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய, முப்படைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதற்கிடையே, குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 300ஐ தாண்டி உள்ளது.  இலங்கை தலைநகர் கொழும்புவில் 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த பயங்கர தாக்குதலில், ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உடல் சிதறி பலியாயினர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உலகையே உலுக்கிய இந்த நாசவேலையை நடத்தியவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினரும் போலீசாரும் தீவிர விசாரணையில் களமிறங்கினர். அவசரநிலை பிரகடனம்: இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசர நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று கூடியது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், நள்ளிரவு 12 மணி முதல் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முப்படைகளுக்கும், போலீசாருக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கும் விதமாக,  தீவிரவாத தடைச்சட்டத்துடன் சம்மந்தப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கான அவசர நிலையை பிரகடனப்படுவதாக அதிபர் சிறிசேனா கூறினார். இதன்படி அவசரநிலை பிரகடனம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.வெளிநாட்டு சதி: மேலும் இக்கூட்டத்தில், தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அமைப்புகள், அவர்களுக்கு உதவியவர்கள், ஆதரவளித்த சக்திகள் அனைத்தையும் முழுமையாக அழிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள பாதுகாப்பு படையினருக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த நாசக்கார சதியில் வெளிநாட்டு சக்திகளிலும் சம்மந்தப்பட்டிருந்தால் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை நாட இருப்பதாக அதிபர் சிறிசேனா தெரிவித்தார். 24 பேர் கைது: இதற்கிடையே, தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியிருப்பதாக இலங்கை அரசு தரப்பில் நேற்று உறுதிபடுத்தப்பட்டது. இதில் உயிரிழந்த 37 வெளிநாட்டினரில், 8 பேர் இந்தியர்கள். கொழும்புவில் பல்வேறு மருத்துவமனைகளில் பலரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்பயங்கர தாக்குதலுக்கு உதவியதாக இதுவரை 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களைப் பற்றிய எந்த தகவலும் முழுமையாக வெளியிடப்படவில்லை. பெரும்பாலும் அவர்கள் கொழும்பில் கைதானதாக தெரிகிறது. இதுவரை இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 7 மனித வெடிகுண்டுகள்: மொத்தம் 7 பேர் மனித வெடிகுண்டாக செயல்பட்டு 8 இடங்களில் தாக்குதல் நடத்தியிருப்பதாக இலங்கை அரசு உறுதிபடுத்தி உள்ளது. ஷாங்கிரி லா, கிங்ஸ்பர்ரி, சின்னமோன் கிராண்ட் ஆகிய ஓட்டல்களிலும், கோச்சிகடேவின் செயின்ட் அந்தோனி தேவாலயம், நெகோம்போவின் செயின்ட் செபாஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பின் ஜியான் தேவாலயம் ஆகிய இடங்களில் தலா ஒரு தீவிரவாதி மனித வெடிகுண்டாக வந்துள்ளான். 7வதாக மிருகக்காட்சி சாலை அருகே மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்துள்ளது. 8வது, வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதியை போலீசார் பிடிக்க முயன்றபோது, அவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான்.சமூக வலைதளங்களுக்கு தடை: தொடர் குண்டுவெடிப்பால், நேற்று முன்தினம் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டது. ஆனாலும் நேற்று இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவை கொழும்பு போலீசார் பிறப்பித்தனர். அதேபோல, வதந்திகள் பரவுவதை தடுக்க பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.  பதற்றம் அதிகரிப்பு: முன்னதாக, கொழும்பின் முக்கிய பஸ் நிறுத்தமான பெட்டாவின் பாஸ்டியன் லேனில் 87 டெடனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, கொழும்பு விமான நிலையம் அருகே ஐஇடி வகை வெடிகுண்டை நிபுணர்கள் நேற்று செயலிழக்கச் செய்தனர். அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் இலங்கை மக்களை மேலும் பதற்றத்துக்குள்ளாக்கி உள்ளது.தேசிய துக்கம் இன்று அனுசரிப்புதொடர் குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இலங்கையில் இன்று ஒருநாள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட உள்ளது.இன்டர்போல் களமிறங்கியதுதாக்குதல் சம்பவத்தில் அந்நிய சக்திகளின் சதி இருப்பதாக குறிப்பிட்ட இலங்கை அதிபர் சிறிசேனா இதுதொடர்பாக சர்வதேச நாடுகளின் உதவியை கோரி உள்ளார். இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று, சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் இலங்கையில் களமிறங்கி உள்ளது. இன்டர்போல் குழு, கொழும்பில் தாக்குதல் நடந்த இடங்களில் நேரில் சென்று விசாரணையை தொடங்கி உள்ளது.பலியானவர்களில் 5 பேர் மஜத கட்சியினர்குமாரசாமி இரங்கல்இலங்கை குண்டுவெடிப்பில் பலியான லட்சுமி நாராயணன், ரமேஷ், ஹனுமந்தராயப்பா, ரங்கப்பா ஆகிய 4 பேரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து குமாரசாமி தனது டிவிட்டர் பதிவில், ‘‘பலியான 4 நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பின்போது அங்கு சென்றிருந்த எங்கள் கட்சி நிர்வாகிகள் 7 பேர் மாயமாகினர். அவர்களில் 4 பேர் இறந்ததாக தகவல் வந்துள்ளது. சிவ்குமார், மரேகவுடா, புட்டராஜூ ஆகிய 3 பேரை காணவில்லை. அவர்களைப் பற்றிய தகவல் அறிய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். பின்னர் சில மணி நேரத்தில், மாயமானதாக கூறப்பட்ட சிவ்குமார் பலியான தகவல் உறுதி செய்யப்பட்டது.அமெரிக்கா, கனடா எச்சரிக்கைஇலங்கை செல்லும் பயணிகளுக்கும், அங்குள்ள தங்கள் நாட்டு மக்களுக்கும் அமெரிக்கா, கனடா அரசுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘இலங்கையில் கிளப், ஓட்டல், தேவாலயம் என எந்த இடத்தில் வேண்டுமானாலும் தீவிரவாதிகள் தாக்கக் கூடிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே, அந்நாட்டிற்கு செல்லும் பயணிகளும், ஏற்கனவே அங்குள்ள அமெரிக்கர்களும் வெளியுறவுத்துறையின் பயணியர் பதிவு திட்டத்தின் கீழ் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்’’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனடா அரசு விடுத்த அறிக்கையில், ‘‘இலங்கைக்கு பயணம் செய்வது என்பது உங்களுடைய சொந்த முடிவு. கனடா குடிமக்களுக்கு போதிய பாதுகாப்பு உதவி வழங்க அரசு எப்போதும் தயாராக உள்ளது’’ என கூறியுள்ளது.டென்மார்க் கோடீஸ்வரரின் 3 குழந்தைகளும் பலிடென்மார்க்கை சேர்ந்த கோடீஸ்வரர் ஆன்ட்ரஸ் போல்சன். இவர் அசோஸ் என்ற ஆன்லைன் பேஷன் ஆடைகள் விற்பனை நிறுவனத்தையும், போல்சன் பேஷன் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஸ்காட்லாந்தில் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 1 சதவீதத்திற்கும் மேல் இவருக்கு சொந்தமானது. இவர் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஈஸ்டரை கொண்டாட இலங்கை சென்றிருந்தார். அப்போது தொடர் குண்டுவெடிப்பில் போல்சனின் 3 குழந்தைகள் பலியாகி விட்டதாக அவரது நிறுவன செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் பெயர்கள் எதுவும் வெளியிடவில்லை.தீவிரவாதியின்  மனைவி, சகோதரி பலிதீவிரவாதிகளுக்கு உதவியதாக கைதானவர்களை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ‘‘ஷாங்கிரி லா ஓட்டலில் மனித வெடிகுண்டாக வந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் அடையாளம் தெரிந்துள்ளது. அவனது பெயர் இன்சான் சீலவன். சிறிய தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளான். அவனது மனைவியும், சகோதரியும் ஒருகொடாவட்டா பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்தனர். அந்த வீட்டை நேற்று முன்தினம் போலீசார் சுற்றிவளைத்த போது, தீவிரவாதி ஒருவன் 8வது குண்டை வெடிக்கச் செய்தான். இதில், இன்சானின் மனைவியும், சகோதரியும் பலியாகினர். தீவிரவாதியை பிடிக்கச் சென்ற 3 போலீசாரும் உயிர் தியாகம் செய்தனர்’’ என்றார். இன்சானின் தொழிற்சாலையில் பணியாற்றிய 9 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவர்களை அடுத்த மாதம் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.உளவு தகவல் அலட்சியம் விசாரணை குழு அமைப்புசுகாதாரத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே அளித்த பேட்டியில், ‘‘தாக்குதல் நடக்க 14 நாட்கள் முன்னதாக, அதாவது ஏப்ரல் 4ம் தேதியே உளவுத்துறையிடமிருந்து அரசுக்கு தகவல் தரப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களை குறிவைத்து மத அமைப்பு ஒன்று மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பாக உளவுத்துறை தலைவர் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், சம்மந்தப்பட்ட அமைப்பில் உள்ள சிலரின் பெயர்கள் கூட குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகவல் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் அமைச்சரவைக்கு எந்த தகவலும் தரப்படவில்லை. உளவுத்தகவல் அலட்சியம் செய்யப்பட்டது ஏன்? அதற்கு பொறுப்பு யார்? என்பது நிச்சயம் கண்டுபிடிக்க வேண்டியது’’ என்றார். இந்த நிலையில், உளவுத்தகவல் அலட்சியம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி விஜித் மலகோடா தலைமையில் குழு ஒன்றை அதிபர் சிறிசேனா அமைத்து உத்தரவிட்டார். 3 மாதமாக தீட்டிய சதித்திட்டம்குண்டுவெடிப்பு நிகழ்ந்த 3 ஓட்டல்களுக்கும் வெடிப்பொருட்களை கொண்டு சென்ற வேனை போலீசார் பிடித்துள்ளனர். அதன் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. மனித வெடிகுண்டாக வந்த தீவிரவாதிகள், கொழும்பின் புறநகர் பகுதியான பனாதுராவில் 3 மாதத்திற்கு முன்பே வீடு எடுத்து தங்கி உள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து 3 மாதமாக அவர்கள் சதித்திட்டம் தீட்டி உள்ளனர். பல்வேறு ஒத்திகைகளையும் அவர்கள் ரகசியமாக நடத்தி இருக்கிறார்கள். பலி எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டுமென்பதே அவர்களின் திட்டம். மேலும், வெளிநாட்டவர்களையும் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 24 பேரும் குறிப்பிட்ட ஒரே மதத்தை சேர்ந்த சிறுபான்மையினர் என்பது குறிப்பிடத்தக்கது.ஓட்டலை காலி செய்தபின் ரஸீனா பலியான பரிதாபம்குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்களில் ஒருவர் ரஸீனா (58). கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வந்தார். ரஸீனாவும் அவரது கணவர் அப்துல் காதரும் கடந்த ஒருவாரமாக ஷாங்கிரி லா ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இலங்கையை சேர்ந்தவரான அப்துலின் உறவினர்களை சந்திக்க கணவன், மனைவி இருவரும் கொழும்பு வந்திருந்தனர். குண்டுவெடிப்பு நடந்த அன்று, அவசர வேலை காரணமாக அப்துல் விமானம் மூலம் துபாய் சென்றுவிட்டார். இதனால் ரஸீனா, கொழும்பில் உள்ள தனது சகோதரர் வீட்டில் ஒருநாள் தங்கிவிட்டு துபாய் செல்ல திட்டமிட்டிருந்தார். அதனால், ஓட்டலை காலி செய்துவிட்டு புறப்பட அவர் தயாராக இருந்த நிலையில், குண்டுவெடிப்பில் சிக்கி பலியானதாக அவரது மைத்துனர் உஸ்மான் தெரிவித்துள்ளார்.தாக்குதல் பின்னணியில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு?இந்த தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. ஏற்கனவே புத்த மதத்திற்கு எதிராக உள்ள இந்த அமைப்பு, புத்த சிலைகளை உடைத்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு ஏற்கனவே பாகிஸ்தான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே அளித்த பேட்டியில், ‘‘நாசவேலையில் உள்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட மத அமைப்பு ஈடுபட்டிருப்பதாக சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவை உறுதிப்படுத்தப்பட்டதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அமைப்பு மட்டுமே தனியாக இந்த சதிவேலையை செய்திருக்க முடியாது. எனவே அந்நிய சக்திகளின் உதவியுடன் இத்தாக்குதல் அரங்கேற்றப்பட்டிருக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.9வது குண்டு வெடித்தது:இந்த பரபரப்புக்கு இடையே, கோச்சிகடே பகுதியில் உள்ள செயின்ட் அந்தோனி தேவாலயத்தின் அருகே தீவிரவாதிகள் பயன்படுத்திய வேன் ஒன்றை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர். அதில், வெடிகுண்டு இருப்பது தெரியவந்ததால் உடனடியாக அப்பகுதியில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த வெடிகுண்டை பத்திரமாக அப்புறப்படுத்தும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் அந்த பார்சல் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை.8 இந்தியர்கள் பலி:இலங்கை குண்டுவெடிப்பில் லோகஷினி, லட்சுமி நாராயணன் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் இறந்திருப்பதாக மத்திய அரசு நேற்று முன்தினம் உறுதி செய்திருந்தது. அதேபோல, துபாயில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த ரஸீனா (58) பலியானதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார். இந்நிலையில், மேலும் 4 இந்தியர்கள் பலியாகி இருப்பது உறுதியாகி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா டிவிட்டரில் தெரிவித்தார். அவர் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘குண்டுவெடிப்பில் ஹனுமந்தராயப்பா, ரங்கப்பா, வெமுராய் துளசிராம், நாகராஜ் ஆகிய மேலும் 4 இந்தியர்கள் பலியாகி இருப்பதை இலங்கை வெளியுறவு அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது’’ என்றார்.இந்திய கடல் பகுதிகள் தீவிர கண்காணிப்பு:இலங்கையில் குண்டுவெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதிகள் கடல் வழியாக இந்தியாவுக்குள் தப்பி வர வாய்ப்பிருப்பதால் இந்திய கடல் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடல் எல்லையை சுற்றி தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூலக்கதை