குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு: இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக அரசு  அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இலங்கையில் கிறிஸ்தவர்கள் நேற்று பல்வேறு தேவாலயங்களில் திரண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை 8.45  மணியளவில் கொழும்புவின் கோச்சிகடே பகுதியில் உள்ள செயின்ட் அந்தோணி புனித தேவாலயத்தில் முதல் குண்டு வெடித்துச் சிதறியது. அதே நேரம், புறநகரான நெகோம்போ பகுதியில் உள்ள செயின்ட் செபாஸ்டியன்  தேவாலயம், தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பில் உள்ள ஜியான் தேவாலயங்களிலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துச் சிதறின.இதுதவிர கொழும்பில் உள்ள பிரபலமான மூன்று 5 நட்சத்திர ஓட்டல்களிலும் வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதில், தேவாலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர்.  உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 290 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி  எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 4 மணி வரை  ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்படுவதாக இருந்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என்றும் முப்படைகளுக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை  அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.இந்த அவசர நிலை பிரகடனத்தை அடுத்து ஊடகங்கள், அரசியல் கட்சிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டுவர அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை  அதிபர் விளக்கமளித்துள்ளார். மேலும் இலங்கையில் நாளை தேசிய அளவில் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இலங்கையில் 290 உயிர்களை பறித்த 8 தொடர் குண்டுவெடிப்பு  சம்பவங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார். இந்நிலையில், கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே இன்று நின்று  கொண்டிருந்த வேனில் இருந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க முயன்றனர். நிபுணர்கள் வெடிகுண்டை செயலிழக்க முயன்று கொண்டு இருந்த போது அது காருடன் வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும்  எந்த பாதிப்பும் இல்லை. 9வது வெடிகுண்டு வெடித்தத்தை அடுத்து கொழும்பு நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே, குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக வழங்கப்படும் என இலங்கை  அரசு அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்ட இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளுக்காக கூடுதலாக ஒரு லட்சம் ரூபாயும்  வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இலங்கையின் ஒரு லட்சம் ரூபாய் இந்தியாவின் 40 ஆயிரம் ரூபாய்க்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை