வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்

மதுரை: மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் பெண் தாசில்தாருடன் சென்ற 3 ஊழியர்களையும்  சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மக்களவை தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள 6 அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் இந்த மையம் முழுவதும் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மதுரை கலால் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றும் (தாசில்தார்) சம்பூரணம் உள்ளிட்ட 4 பேர், நேற்று முன்தினம் மருத்துவக் கல்லூரியில் மதுரை மேற்கு தொகுதிக்கான ேதர்தல் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றனர். 3 மணி நேரம் அங்கிருந்த அவர்கள், சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்த போது போலீசாரிடம் சிக்கினர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மக்களவை தொகுதி திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மற்றும் எதிர்கட்சி நிர்வாகிகள் மருத்துவமனை முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கையை மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பிய மதுரை கலெக்டர் நடராஜன், நேற்று பெண் அதிகாரி சம்பூரணத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மேலும் விசாரணையில் சம்பூரணத்துடன் சென்றவர்கள் கலால் துறையை சேர்ந்த  ஊழியர்கள் சீனிவாசன், ராஜ்பிரகாஷ், சூரியபிரகாஷ் என்பது தெரியவந்தது. வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து சம்பூரணம் எடுத்து வந்த ஆவணங்களை அவர்கள் ஜெராக்ஸ் எடுத்து, அவரிடமே  கொடுத்துள்ளனர்.

இதையடுத்து கலெக்டர் நடராஜன் அவர்கள் 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து நேற்று இரவு உத்தரவிட்டார்.

.

மூலக்கதை