நடப்பாண்டில் இதுவரை 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு : மத்திய அமைச்சகம் தகவல்

தினகரன்  தினகரன்
நடப்பாண்டில் இதுவரை 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு : மத்திய அமைச்சகம் தகவல்

டெல்லி : நடப்பாண்டில் இதுவரை 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் பாரம்பரிய கலாச்சார சிறப்புகளை கொண்ட வேளாண் பொருட்கள், கைவினை பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அப்பொருட்களை அவற்றிற்கான சிறப்பு பெயருடன் வேறு யாரும் சந்தைப்படுத்த முடியாது. மேலும் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு அதிக விலையும் கிடைக்கிறது. இந்த வகையில் இந்த ஆண்டு கேரளாவின் வயநாடு பகுதியில் விளையும் ரோபஸ்ட்டா காபி, கர்நாடகாவின் கூர்க் பகுதியில் உற்பத்தியாகும் கூர்க் அரபிகா காபி உள்ளிட்ட 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தின் கருஞ்சீரகம், கருந்தமால் மஞ்சள் ஆகியவையும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் 2004ல் முதன்முறையாக டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. தற்போது 344 பொருட்கள் இப்பட்டியலில் உள்ளன. இப்பட்டியலில்  இந்தியாவின் காஷ்மீர் பாஷ்மினா சால்வைகள், நாக்பூர் ஆரஞ்சுகள், திருப்பதி லட்டு, என பல பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு புகழ்பெற்ற ஈரோடு மஞ்சளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. திருபுவனம் பட்டுச்சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கி புவிசார் குறியீடு பதிவுத்துறை உத்தரவிட்டது.

மூலக்கதை