பாகிஸ்தானின் எல்லைதாண்டிய வர்த்தகத்திற்கு தற்காலிகத் தடை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானின் எல்லைதாண்டிய வர்த்தகத்திற்கு தற்காலிகத் தடை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்தில், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தானுடன் நடைபெறும் வர்த்தகத்தை மீண்டும் தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லைத் தாண்டிய வர்த்தகம், தற்போது பாரமுல்லா மாவட்டம் உரியிலுள்ள சலமாபாத், பூஞ்ச் மாவட்டத்திலுள்ள சக்கான் டா-பாக் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த வர்த்தகமானது, வாரத்துக்கு 4 நாட்கள் நடைபெறுகிறது. முன்னதாக, காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. எனினும், காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே, இரு நாட்டு மக்களின் அத்தியாவசிய பொருட்களுக்கான வர்த்தகம் நடைபெற்று வந்தது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி எல்லைக்கட்டுபாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பூஞ்ச் பகுதியில் பிஎஸ்எஃப் வீரர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 5 பாதுகாப்புப் படையினர் உள்பட 24 பேர் படுகாயமடைந்தனர். இதன் காரணமாக பூஞ்ச்- ராவலாகோட் பகுதிகளுக்கிடையே நடைபெற்று வந்த பயணிகள் பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக, பாகிஸ்தானுடனான வர்த்தக பரிமாற்றமும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 16ம் தேதி மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லைதாண்டிய வர்த்தகம் தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் பாகிஸ்தானுடனான எல்லைதாண்டிய வர்த்தகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, எல்லை தாண்டிய வர்த்தகத்தின் மூலம், பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் சில சக்திகள் தவறாகப் பயன்படுத்துகின்றன என்றும், இந்த வர்த்தகத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆயுதங்கள், போதைப் பொருள்கள், கள்ள கரன்சி நோட்டுகள் மற்றும் பிற பொருள்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படுகின்றன என்றும் விசாரணை அமைப்புகள் அறிக்கை அளித்தன. இதைப் பரிசீலித்து சலமாபாத், சக்கான் டா-பாக் ஆகிய இடங்களில் நடைபெறும் பாகிஸ்தானுடனான எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தற்காலிகத் தடை விதிப்பதென்று அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

மூலக்கதை