அமைதி பேச்சுவார்த்தையில் அதிருப்தி வடகொரியா மீண்டும் ஆயுத சோதனை: அமெரிக்க அமைச்சரை மாற்ற கோரிக்கை

தினகரன்  தினகரன்
அமைதி பேச்சுவார்த்தையில் அதிருப்தி வடகொரியா மீண்டும் ஆயுத சோதனை: அமெரிக்க அமைச்சரை மாற்ற கோரிக்கை

சியோல்: அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒழிப்பு பேச்சுவார்த்தையில் அதிருப்தி அடைந்துள்ள வடகொரியா, மீண்டும் ஆயுத  ேசாதனை நடத்தியதாக தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில்,  நடுத்தர மற்றும் தொலைதூர அணு ஏவுகணைகளை வடகொரியா அடிக்கடி சோதனை  செய்து வந்தது. அணு ஆயுத தயாரிப்பை நிறுத்திவிட்டு வடகொரியா பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என அமெரிக்க அதிபர்  டிரம்ப் அழைப்பு விடுத்தார். தென்கொரியாவுடன் உறவு சுமூகமானதையடுத்து, அமெரிக்க அதிபருடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்த  வடகொரிய அதிபர் கிம் சம்மதித்தார். இதனால் சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். இந்த  பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இந்த முன்னேற்றங்கள் கொரிய தீபகற்பகத்தில் பதற்றத்தை  குறைத்தது. ஆனால், வடகொரியா மீதான தடைகள் எதையும் அமெரிக்கா நீக்கவில்லை.  இதையடுத்து, வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ  நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார். இவரது பேச்சுவார்த்தை வடகொரிய தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.  வடகொரியாவின் தேவையை இறுதி செய்யாமல், மைக் பாம்பியோ தனது பேச்சு திறமையால், பல தவறான கருத்துக்களை  தெரிவிக்கிறார் என வடகொரியா தெரிவித்துள்ளது. அணு ஆயுத பேச்சுவார்த்தையில் இருந்து மைக் பாம்பியோவை நீக்குமாறும்,  கவனமாகவும், பக்குவமாகவும் பேசும் தலைவரை நியமிக்க வேண்டும் என வடகொரியா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் பேசிய வடகொரிய அதிபர் கிம், ‘‘அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் 3வது கட்ட  பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன். ஆனால்,  வடகொரியா மீதான தடையில்,  இந்தாண்டு இறுதிக்குள் அமெரிக்கா தனது  நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும்,’’ என கூறியுள்ளார்.  இந்நிலையில், வடகொரிய தனது புதிய ஆயுதத்தை நேற்று சோதனை செய்ததாக தெரிவித்துள்ளது. இந்த சோதனையை வடகொரிய  அதிபர் கிம் நேரில் பார்த்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது தடை செய்யப்பட்ட நடுத்தர அல்லது தொலை தூர அணு  ஏவுகணை அல்ல. புதிய ரக ஆயுதத்தை சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் வெளியிடப்படவில்லை.  அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை பலவீனமடைவது வடகொரிய ராணுவ அதிகாரிகளையும், மக்களையும் கவலையடைச்  செய்துள்ளது. ஆயுத மேம்பாட்டில் வடகொரியா முனைப்புடன் இருப்பதை உறுதி செய்வதற்காக அதிபர் கிம் இந்த சோதனையை நடத்தியுள்ளார்  என கூறப்படுகிறது.புடின் பயணம்ரஷ்ய அதிபர் புடின் இம்மாத இறுதியில் வடகொரியா செல்கிறார். அங்கு அவர் வடகொரிய  அதிபர் கிம்மை சந்திக்கலாம் என  ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம், இம்மாத இறுதியில் அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க  அழைப்பு விடுத்துள்ளதாக ரஷ்யா நேற்று அறிவித்துள்ளது. இதுவும் வடகொரியாவின் நடவடிக்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்  என கூறப்படுகிறது.

மூலக்கதை