கோட்டை விட்ட கங்குலி | ஏப்ரல் 18, 2019

தினமலர்  தினமலர்
கோட்டை விட்ட கங்குலி | ஏப்ரல் 18, 2019

உலக கோப்பை கவுன்ட் டவுண்: இன்னும் 41 நாட்கள்

எட்டாவது உலக கோப்பை தொடர்(2003) ஆப்ரிக்க கண்டத்தில் முதல் முறையாக நடந்தது. மொத்தம் 14 அணிகள் பங்கேற்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற அணிகள் ‘சூப்பர்–-6' சுற்றுக்கு முன்னேறின. இத்தொடரில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. ‘ஜிம்பாப்வேயில் ஜனநாயகம் செத்து விட்டது' என்று கூறிய அந்நாட்டு வீரர்கள் ஆன்டி பிளவர், ஹென்ரி ஒலங்கா ‘கறுப்பு பட்டை' அணிந்து விளையாடினர். ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகோபேயின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு சென்று விளையாட இங்கிலாந்து மறுத்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கென்யா சென்று விளையாட நியூசிலாந்து மறுத்தது. முதல் அரையிறுதியில் கங்குலி சதம்(111) அடிக்க இந்திய அணி(270/4), கென்யாவை(179) வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை வென்றது.

கங்குலி தவறு: ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடந்த பைனலில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. மழை காரணமாக ஆடுகளத்தில் ஈரப்பதம் காணப்பட, ‘டாஸ்' வென்ற இந்திய கேப்டன் கங்குலி முதலில் ‘பீல்டிங்' செய்வது என தவறாக கணித்தார். இதனை பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய அணி ரன் மழை பொழிந்தது. கில்கிறிஸ்ட்(57), ஹைடன்(37) கேப்டன் பாண்டிங்(140), டேமியன் மார்ட்டின்(88) கைகொடுக்க, 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்தது.

இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சச்சின்(4), கங்குலி(24), டிராவிட்(47) ஏமாற்றினர். சேவக்(82) ஆறுதல் அளித்தார். 39.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்டது. 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

 

 

‘சூப்பர்’ சச்சின்

கடந்த 2003ல் நடந்த உலக கோப்பை தொடரில் இந்தியாவின் சச்சின் ரன் மழை பொழிந்தார். 11 போட்டிகளில் ஒரு சதம், 6 அரைசதம் உட்பட 673 ரன்கள்( சராசரி 61.88) எடுத்தார். இவரே தொடர் நாயகன் விருதை வென்றார்.

மூலக்கதை